h21 நாட்கள்: ப.சிதம்பரத்தின் 10 ஐடியாக்கள்!

politics

அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசு அமல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ப.சிதம்பரம் பட்டியலிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இதனால் அன்றாடப் பணியாளர்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்குப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் என்று சிலவற்றை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பட்டியலிட்டுள்ளார்.

“1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.

2. நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளையும் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். மாநில அரசிடமிருந்து அவர்கள் குறித்த விவரங்களைப் பெற்று, ஒவ்வொரு குத்தகை விவசாயிகளுக்கும் உதவித் தொகையை ரூ.6,000 என்று இரண்டு தவணையாக வழங்க வேண்டும்.

3. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.3,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

4. நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கை வங்கிகள் மூலம் பெற்று அவர்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 6,000 ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும்.(அதில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்)

5. அடுத்த 21 நாட்களை அளவீடாக எடுத்துக்கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க வேண்டும். அதை ஹோம் டெலிவரி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

7. மேற்கூறியவற்றில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.

8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

9. வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

10. மக்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்”

இவை அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *