மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

பாஜகவை நோக்கி அழகிரி:  அணி வகுக்கும் ராஜா, ராமலிங்கம்

பாஜகவை நோக்கி அழகிரி:  அணி வகுக்கும் ராஜா, ராமலிங்கம்

திமுக அணியின் விவசாய அணிச் செயலாளர் கே.பி. ராமலிங்கம்  அப்பொறுப்பில் இருந்து  நேற்று   (மார்ச் 30)  நீக்கப்பட்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  வலியுறுத்தி வரும் நிலையில்,   தனது கட்சித் தலைவரின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகவே தெரிவித்தார் கே.பி.ராமலிங்கம். உடனடியாக அவர்  அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.  இதற்குப் பின்னால் பெரும் அரசியல் இருக்கிறது என்கிறார்கள். 

  “திமுக துணை அமைப்பான விவசாய அணிக்கு செயலாளராக இருக்கும் கே.பி. ராமலிங்கத்துக்கு இதுபோன்று அறிக்கை வெளியிட்டால் தான் நடவடிக்கைக்கு உள்ளாவோம் என்று நன்கு தெரியும்.  அப்படி தெரிந்துதான்... கொரோனா நடவடிக்கைகளில் எடப்பாடியை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பாராட்டிவிட்டு,  ’காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி தலைவா்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது. அவசியமான  கருத்துகள் இருந்தால் அரசியல் கட்சித் தலைவா்கள் இ-மெயிலில் முதல்வருக்கு அனுப்பவேண்டும். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும்தான். அரசியல் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது”  என்று அறிக்கை வெளியிட்டார் கே.பி. ராமலிங்கம். இவர் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்.

இந்த நிலையில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். கே.பி. ராமலிங்கம் இப்படி  திமுகவுக்கு எதிராக அறிக்கை விடும் சூழலில்தான், இதுவரை பல இயற்கை சீற்றங்களின் போது பெரிதாக களமிறங்காத அழகிரி, இந்த முறை கொரானோ வைரஸ் தொற்று விவகாரத்தில் முதல்வரின் நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார்.  

கே.பி. ராமலிங்கம், வீரபாண்டி ராஜா ஆகியோர் ஏற்கனவே அதிமுகவில் சேர  ஒரு திட்டம் இருந்திருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ‘எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில் அம்மாவை தாக்கி கீழே இறக்கிவிட்டவர்தான் கே.பி. ராமலிங்கம். அவரை அதிமுகவில் எப்படி சேர்த்துக்க முடியும்? அதேபோல வீரபாண்டி ராஜா சேலத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர்.  அவரை எப்படி இணைத்துக் கொள்ள முடியும்?’  என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில்  புதிய பாஜக தலைவர் முருகன் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் தலையிட்டு  பாஜகவுக்கு வாருங்கள் என்று இருவரிடமும் பேசியிருக்கிறார்.  அமித் ஷா வரைக்கும் தகவல் கொண்டு செல்லப்பட்டு சில டீலிங்குகள் நடந்திருக்கின்றன. இதன் பிறகே அழகிரி,  கே.பி. ராமலிங்கம், வீரபாண்டி ராஜா ஆகியோரை பாஜகவில் சேர்ப்பது என்ற ஒரு முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்  விளைவாகத்தான் கே.பி. ராமலிங்கத்தின் அறிக்கை வெளிவந்திருக்கிறது.

தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு  அண்மையில் பாஜகவின் முயற்சியால் ராஜ்யசபா எம்பி  அளிக்கப்பட்டது.  அந்த வகையில் மு.க. அழகிரியும் முன்னாள் மத்திய அமைச்சர். தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே  அழகிரிக்கும் ராஜ்யசபா எம்பி பதவி அளிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து  அழகிரியை ராஜ்யசபா எம்பி ஆக்குவது என்பதுதான் பாஜகவின் இப்போதைய திட்டம். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே மு.க. அழகிரியோடு பேசியிருக்கிறார். 

ஆக விரைவில் அழகிரி, கே.பி. ராமலிங்கம், வீரபாண்டி ராஜா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களோடு பாஜகவில் இணையும் விழா நடக்கலாம். இதன் மூலம் தேர்தல் நேரத்தில் திமுகவில் ஒரு சேதாரத்தை  ஏற்படுத்தலாம் என்று திட்டமிடுகிறது பாஜக” என்கிறார்கள் பாஜக உயர் வட்டாரங்களில்.

 இவ்வளவு நடந்தும் கேபி.ராமலிங்கத்தை அடிப்படை உறுப்பினர்  பொறுப்பில் இருந்து நீக்காமல் ஏன் பதவியில் இருந்து மட்டும் நீக்கினார் ஸ்டாலின் என்று கொங்கு திமுகவினர் கேட்கிறார்கள்.

-வேந்தன்

  

செவ்வாய், 31 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon