மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ராஜேந்திரபாலாஜிக்கு ரஜினி தந்த சிக்னல்!

ராஜேந்திரபாலாஜிக்கு ரஜினி தந்த சிக்னல்!

பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திரபாலாஜி மார்ச்  23 ஆம் தேதி  விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி அளவிலான பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் அரசு ரீதியிலான பதவியான அமைச்சர் பதவியில் தொடர்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலால் நாடெங்கும்  அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவி நீடிக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இதற்கிடையில் விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம், ராஜபாளையம் நகராட்சியில் நடந்த ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தார். மேலும்   தூய்மைப் பணியாளர்களோடு சென்று வீதிவீதியாக கிருமி நாசினியை தன் கையாலேயே ஸ்ப்ரே செய்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இந்த நிலையில் அரசியல் ரீதியாக அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவரது வட்டாரத்தில் விசாரித்தோம்.

 “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்புகொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததும், அவருடன் தொடர்ந்து பேசி வந்ததும் மட்டுமல்ல அவர் மீதான நடவடிக்கைக்கு இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன.  தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு துறையையும் முதலமைச்சரின் செயலாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு துறை பற்றியும் முதல்வருக்கு ரிப்போர்ட் அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பால்வளத்துறையை  கவனிக்கும் முதல்வரின் செயலாளர்களில் ஒருவருக்கும் ராஜேந்திரபாலாஜிக்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டது. முதல்வர் அலுவலகம் பரிந்துரைத்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ராஜேந்திரபாலாஜி தன் துறைக்கு உட்பட்ட ஆவினில்  பணிகள்  தர மறுத்தார். இதனால் நேரடியாகவே முதல்வருடன் முரண்பட்டார் ராஜேந்திரபாலாஜி.  இதுவும் அவர் மீதான நடவடிக்கைக்கு ஒரு காரணம்.

பதவி பறிபோன பின் யாருடனும் பேசாமல் மனம் புழுங்கிக் கிடந்தவரிடம் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்  பேசியிருக்கிறார்கள். ‘கவலைப்படாதீங்க. உங்களுக்கான நேரம் வரும்னு  ரஜினி சார் சொல்லச் சொன்னார்’ என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலை அடுத்து  உற்சாகமான ராஜேந்திரபாலாஜி  தனது மாவட்டத்துக்கு வந்து மக்கள் பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டார். கொரோனா தடுப்புப் பணிகளை ஒவ்வொரு பகுதியாக சென்று தானே செய்து வருகிறார். அரசியலில் எங்கே சென்றாலும் மக்கள் பணிதான் காப்பாற்றும் என்பதால் முன்பைவிட கூடுதல் அக்கறையோடு கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் அமைச்சர்” என்கிறார்கள்.

வேந்தன்

செவ்வாய், 31 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon