மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ஆளுநர் சந்திப்பு: விஜயபாஸ்கரைப் புறக்கணித்த எடப்பாடி - ஏன்? 

ஆளுநர் சந்திப்பு: விஜயபாஸ்கரைப் புறக்கணித்த எடப்பாடி - ஏன்? 

“கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு நோய்க்கு எதிரான நடவடிக்கை. இதில் எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்க என்ன இருக்கிறது?” என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய கேள்விக்குச் சில நாட்களுக்கு முன் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 31ஆம் தேதி) மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் விளக்கியதாகச் சந்திப்புக்குப் பின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதில் என்ன வியப்பு என்றால் கொரோனா தடுப்பு விவகாரம் பற்றிய நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் விளக்குவதற்காகச் சென்ற முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செல்லவில்லை.

முதல்வருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளிட்டோர் சென்றனர். முதல்வரின் சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகமே தமிழக அரசின் அனைத்துப் பணிகள் பற்றி ஆளுநரிடம் விளக்கியிருக்கிறார்.

ஏற்கனவே சில நாட்களாகவே கொரோனா தடுப்புப் பணிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடகங்களாலும் சமூகதளங்களாலும் பாராட்டப்பட்ட நிலையில், அவரது ஐடி டீம் வடிவமைத்த பல மீம்ஸ்கள் முதல்வரின் கவனத்துக்குச் சென்றதையும் அதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்புகளில் செயலாளர் பீலா ராஜேஷ் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டதையும் மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம்,.

அதற்குப் பிறகும் ஓரிருமுறை விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனபோதும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் முறையான பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவர் தவிர்க்கப்பட்டார். மேலும் கொரோனா தடுப்பு விவகாரத்தில் சில நாட்களாகவே தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவரை பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறார் முதல்வர். அந்த வகையில்தான் ஆளுநரைச் சந்திக்கப் போகும்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலேயே இருந்தும் அவரைத் தவிர்த்துவிட்டு, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை அழைத்துச் சென்றிருக்கிறார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் விளக்கியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் விஜயபாஸ்கரையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையான அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாகக் கூறுகிறார்கள் புதுக்கோட்டை வட்டாரத்தில்.

“எதையுமே துல்லியமாகத் திட்டமிட்டுச் செய்யக் கூடியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். பேசும்போதெல்லாம் முதல்வர் அண்ணனின் ஆணைக்கு இணங்க என்றுதான் சொல்கிறார். ஆனாலும் விஜயபாஸ்கரின் அதிகரிக்கும் புகழ் தமிழக முதல்வரை நெருடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ‘என்னோட எயிம் முதலமைச்சர் ஆவறதுதான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போதே இது எடப்பாடி கவனத்துக்குச் சென்றது. கொரோனா தடுப்புப் பணிகளில் விஜயபாஸ்கருக்குக் கிடைத்த மைலேஜ் மீண்டும் மேலே உறுத்தியிருக்கிறது. ஆளுநருடனான சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் இல்லாதது சக அமைச்சர்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாதாரணமான இந்த நேரத்தில் தனக்கு நெருக்கமான தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு முதல்வர்தான் உட்கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு விஜயபாஸ்கரின் ரியாக்‌ஷன் விரைவில் தெரியும்” என்கிறார்கள்.

வேந்தன்

புதன், 1 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon