எடப்பாடியுடன் பனிப்போர்: விஜயபாஸ்கரின் சைலன்ஸ் வியூகம்!

politics

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டதோ சமூகத் தொற்று முறையில் பரவ ஆரம்பித்துவிட்டதோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்  ஒருபக்கம்  தடுப்புப் பணிகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில்…. தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கருக்கும் இடையே நடக்கும் பாலிடிக்ஸ் பனிப்போர் இந்தப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறையிலேயே  சிலர்.

இதுபற்றி  அதிமுக வட்டாரத்திலும், சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்தியிலும் விசாரித்தோம்.

“கொஞ்சம் கொஞ்சமாக விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.  பிரதமர் மோடி  கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்  தொலைபேசியில் பேசினார்.  அப்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் 144 உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவது பற்றியும் கேட்டறிந்தார். பிரதமருடனான  இந்த உரையாடலின் அடிப்படையில்தான்  மார்ச் 31 ஆம் தேதி  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் சந்தித்தார்.அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் சட்டம் ஒழுங்கு பற்றியும் ஆளுநரிடம் விளக்கியுள்ளார்.

இந்த சந்திப்பில் தன்னை அழைக்காமல் சென்றது சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடுமையான மன வருத்தத்தை ஏறப்டுத்தியிருக்கிறது.  சுமார் ஒன்றரை மாத காலமாக இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து வரும் தன்னை ஆளுநர் சந்திப்பின் போது தவிர்த்ததன் மூலம்… தமிழக அரசு எடுத்து வரும்  வேகமான நடவடிக்கைகளை ஆளுநருக்கு துல்லியமாக எடுத்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று தனது  நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர்.

மேலும்  இது தொடர்பாக புதுக்கோட்டையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு  உறுதியான ஒரு கட்டளையையும் அவர்  இட்டுள்ளார். எனக்கும் முதல்வருக்கும்  இடையே அப்படி இப்படி என்றும் எதுவும் சமூக தளங்களில் பதிவேற்றாதீர்கள். இதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.அதனால்தான் வழக்கம்போல் விஜயபாஸ்கருக்காக பொங்கி எழுபவர்கள் கூட அடக்கியே வாசிக்கிறார்கள். 

அதையும் தாண்டி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நற்பணி மன்றம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சிலர், ‘ அண்ணன் விஜயபாஸ்கர்  மணிக்கு மணி கொரோணா பற்றி தகவல் வந்தது எந்த எந்த மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எப்படி கொரோணா பரவியது என்று பல தகவல்களை வழங்கினர் ஆனால் இப்போது அப்படி இல்லை வருத்தமாக இருக்கிறது’ என்று சிலர் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதுபோன்ற பதிவுகளை  உடனடியாக நீக்குமாறு  அமைச்சரின் பி.ஏ.க்கள் வற்புறுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் சென்னையில் இன்னொரு தகவலும் உலா வருகிறது. விஜயபாஸ்கர் இப்போது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லாத நிலையிலும் மாவட்டச் செயலாளர் வைரமுத்து அவரது ஆதரவாளராகவே இருக்கிறார். விஜயபாஸ்கர் இப்போது அதிமுகவின அமைப்புச் செயலாளார்களில் ஒருவர். அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்று எடப்பாடி தகவல் தருமாறு உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விஜயபாஸ்கர் மீது  ஆர்.கே. நகர் தேர்தல் பணிக்காக 84 கோடி ரூபாய் விநியோகித்த புகார், குட்கா விவகாரம் என்று சீரியசான வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடியை  உடனடியாக பகைத்துக் கொள்ள விஜயபாஸ்கர் விரும்பவில்லை. அதனால்தான் அமைதி காக்கிறார்.  விஜயபாஸ்கரின் வியூகம் விரைவில் தெரியத்தான் போகிறது” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *