மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

மக்களிடம் பேசும் பிரதமர்: ஊரடங்கு நீட்டிப்பா?

மக்களிடம் பேசும் பிரதமர்: ஊரடங்கு நீட்டிப்பா?

பிரதமர் நரேந்திர மோடி நாளை வீடியோ செய்தியை பகிரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவையும் மிரட்டத் துவங்கியுள்ளது. தொடக்கத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் நாளாக நாளாக அது வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50 ஆக உள்ளது.

கடந்த 24ஆம் தேதி இரவு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகக் கூறினார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று 9ஆவது நாளை எட்டியுள்ளது. இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மன் கீ பாத் உரையில் பிரதமர் தெரிவித்திருந்தார். எனினும், கொரோனா தீவிரமாகி வரும் வேளையில் மக்கள் அதுகுறித்து விழிப்புணர்வு கொள்ளாமல் வெளியில் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை காலை 9 மணிக்கு, எனது சக இந்தியர்களுடன் ஒரு சிறிய வீடியோ செய்தியைப் பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என்றால் ஏதோ ஒரு முக்கிய செய்தியை பகிரப்போகிறார் என்ற அர்த்தம்தான் பொதுமக்கள் மனதில் உள்ளது. அதன்படிதான் ஒருநாள் மக்கள் ஊரடங்கு, 21 நாட்கள் ஊரடங்கையும் அறிவித்தார். தற்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகவேகமாக உயர்ந்துவரும் நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்துதான் பிரதமர் அறிவிக்கப் போகிறார் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனினும், பிரதமர் வெளியிடும் வீடியோ கொரோனா விழிப்புணர்வு தொடர்பாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எழில்

வியாழன், 2 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon