மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

கொரோனாவுக்கு மதச் சாயம் பூசாதீர்கள்: நட்டா கட்டளை

கொரோனாவுக்கு மதச் சாயம் பூசாதீர்கள்: நட்டா கட்டளை

கொரோனா வைரஸுக்கு மதச் சாயம் பூச வேண்டாமென்றும், இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் பாஜகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜேபி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு  டெல்லியில் தப்லீக் ஜமாத் அமைப்பினர் நடத்திய மாநாடுதான் முக்கியக் காரணம் என்று பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கடுமையான கருத்து தெரிவித்து வந்தனர். ஏப்ரல் 1 ம் தேதி, பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியா  தனது ட்விட்டரில்,  “டெல்லியின் இருண்ட அடிவயிறு வெடிக்கிறது! கடந்த 3 மாதங்களில் இஸ்லாமிய எழுச்சியைக் கண்டோம், முதலில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பெயரில் ஷாஹீன் பாக் முதல் ஜாமியா வரை.  இப்போது மார்கஸில் தீவிரவாத தப்லிகி ஜமாஅத்தின் சட்டவிரோத கூட்டம். இதற்கு முடிவு கட்ட வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவிட்டார். 

மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி: “தப்லீக் ஜமாத் தாலிபானைப் போல குற்றம் செய்திருக்கிறது. . இது ஒரு அலட்சியம் அல்ல. இது ஒரு கடுமையான குற்றச் செயல். முழு நாடும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடும்போது, இத்தகைய பாவம் மன்னிக்க முடியாதது” என்று கூறினார். 

கோவா முதலமைச்சரும் பாஜக தலைவருமான பிரமோத் சாவந்த், "தப்லிகி ஜமாஅத்) இந்தியாவை சேதப்படுத்தியுள்ளது" என்று கூறினார்இவ்வாறு பாஜகவின் முக்கியத் தலைவர்கள்  ஆரம்பித்து வைக்க, சமூக தளங்களில் பாஜகவினரும் இதே ரீதியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில்  கொரோனா வைரஸுக்கு எந்த வித மதச்சாயமும் பூச வேண்டாம் என்று பாஜகவினருக்கு அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு  பாஜகவின் தேசியப் பொறுப்பாளர்களுடனான  ஆலோசனையின் போது,  “கட்சியின் எந்தத் தலைவரும் எந்தவொரு ஆத்திரமூட்டும் அல்லது பிளவுபடுத்தும் கருத்தையும் கூறக்கூடாது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிரதமர் மற்றும் மாநில அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் . தேசத்தை வழிநடத்தும் ஒரு பெரிய பொறுப்பு  நமக்குள்ளது . வைரஸ்  நோய் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் பாதிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளது, எனவே ஆத்திரமூட்டும் எந்தவொரு அறிக்கையையும் கருத்துகளையும் யாரும் வெளியிடக்கூடாது” என்று  நட்டா கண்டிப்போடு தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற ஒரு மூத்த தலைவரின் கூற்றாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேந்தன் 

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon