�புறக்கணிப்பு: புதுத் திட்டத்தோடு புதுக்கோட்டைக்கு திரும்பிய விஜயபாஸ்கர்

politics

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளின் மையமாக இருந்து செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாகவே ஓரங்கட்டப்பட்டார்.

கொரோனாவுக்குப் பின்னால் நடக்கும் இந்த அரசியலை, [இது விஜயபாஸ்கர் மாநிலமா? எடப்பாடியை பிரேக் போட வைத்த ஏழாம் அறிவு](https://minnambalam.com/politics/2020/03/29/58/edapadi-break-for-vijayabaskar-corona) என்ற செய்தியின் மூலம் முதன் முதலில் மின்னம்பலம் வெளியிட்டது.

இதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கப்பட்டு, அந்த இடத்துக்கு சுகாதாரத்துறை செயலாளர் வந்தார். அரசின் அதிகாரபூர்வமான செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்தப் பணிகளை கவனித்துக் கொண்டார்.

ஏற்கனவே வைரஸ் தடுப்பு பணிகளைப் பற்றி ஆளுநரிடம் விவரிக்க சென்றபோது அமைச்சர் விஜயபாஸ்கரை கூட்டிச் செல்லாமல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அனைத்து மதத் தலைவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய போதும் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லாமல் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில்அதிகாரிகளைக் கொண்டே அந்தக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வை ஆய்வு செய்வதற்காக சென்னையிலேயே முகாமிட்டிருந்த விஜயபாஸ்கர்… இனி தனக்கு சென்னையில் அவ்வளவாக பணிகள் இல்லாததை உணர்ந்து நேற்று விழுப்புரம் எம் சி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு வார்டுகள் பற்றி மருத்துவத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இன்று (ஏப்ரல் 5) ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பிய விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான விராலிமலை அரசு மருத்துவமனை, இலுப்பூர் அரசு மருத்துவமனை, அன்னவாசல் அரசு மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களோடு ஆலோசனை நடத்தி கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தார்.

மேலும் புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு சென்று அங்கு சுகாதார வசதிகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார் விஜயபாஸ்கர். இன்று மாலை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை எம் சி மருத்துவமனை ஆகியவற்றில் தனிமைப்படுத்தும் வார்டுகள் பற்றியும் சுகாதார வசதிகளையும் ஆய்வு செய்தார்.

தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒரு மாநில அமைச்சராக இருந்து சென்னையில் முகாமிட்டு கவனிக்கவேண்டிய விஜயபாஸ்கர் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால்… தனது மாவட்டம், தொகுதியையாவது பார்ப்போம் என்று புறப்பட்டு புதுக்கோட்டை வந்துவிட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு கொரோனா தடுப்புப் பணிகளைப் பற்றி ஆராயும் திட்டமும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருக்கிறது என்கிறார்கள் அவரது வட்டாரத்தினர். இதன் மூலம் மாநிலம் முழுதும் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார் விஜயபாஸ்கர்.

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *