மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அதிமுகவுக்கு அப்பால்... ராஜேந்திரபாலாஜியின் ஆன்மீக அரசியல்!

அதிமுகவுக்கு அப்பால்... ராஜேந்திரபாலாஜியின் ஆன்மீக அரசியல்!

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிப் பொறுப்பில் இருந்து கடந்த மார்ச் 23ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

பால்வளத்துறை அமைச்சர் பதவியில் தொடரும் ராஜேந்திரபாலாஜி, சில நாட்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு திரும்பி கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சியில் சென்று வைரஸ் தடுப்பு ஆய்வு பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று ஏப்ரல் 6-ஆம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேற்கொண்ட நடவடிக்கை அதிமுக வட்டாரத்திலும் பாஜக வட்டாரத்திலும் கவனக் குவிப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சிவகாசி பகுதிகளிலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் கோவில் பணியாளர்களுக்கு 5000 ரூபாயும் என மொத்தம் 50 பேருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து அளித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

ஏற்கனவே சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் அனைவரையும் கண்டறிந்து வெளிமாநில தொழிலாளர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தன் சொந்த செலவில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

“சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்கிறார்கள். ஆனால் கோயில் அர்ச்சகர்களுக்கு அரசியல்வாதிகள் தேடிவந்து உதவி செய்வது அபூர்வம். ஆனால் ராஜேந்திரபாலாஜி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களை அழைத்து கை நிறைய நிதியளித்திருக்கிறார். அவர் எப்போதுமே ஆன்மீக அரசியலில் ஈடுபட்டிருப்பவர். இனி வரும் காலத்திலும் அவரது ஆன்மீக அரசியல் தொடரும் என்பதற்கு இதுவே சாட்சி” என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள் தரப்பில். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த செயல்பாட்டைப் பார்த்து பாஜக, இந்து முன்னணி பிரமுகர்கள் அமைச்சருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள்.

ராஜேந்திரபாலாஜியின் அரசியல் நகர்வுகள் குறித்து அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.

"விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்ட போதிலும் அதற்காக விரக்தி அடைந்து விடாமல் மக்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அரசு ரீதியான உதவிகளை மட்டுமல்லாமல் தன் சொந்த செலவில் பல்வேறுபட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ’முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக வலிமையான குரல் கொடுத்தவன் நான். ஒருவேளை நாளை ஓபிஎஸ் சுக்கும் எடப்பாடி க்கும் வெளிப்படையாக பிரச்சினை வந்தால் அப்போதும் எடப்பாடியை நான் ஆதரிப்பேன் என்று எடப்பாடிக்கே தெரியும்' என்று சொல்லி வருகிறார்.

அதேநேரம் வேறு எந்த கட்சி என்ற போதிலும் தன்னுடைய அரசியல் வாழ்வை விருதுநகர் மாவட்டத்தில் வலிமையாக நடத்திச் செல்வதில் செல்வது என முடிவு செய்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி. அதற்காகத்தான் அரசு வழங்கும் உதவிகளை தாண்டி தன் சொந்த செலவில் சிவகாசி தொகுதிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தன் நலத்திட்ட உதவிகளை சென்று சேர்த்து வருகிறார். அதிமுக விலேயே இதுவரை யாரும் செய்யாத வகையில் கோவில் அர்ச்சகர் களையும் கோவில் பணியாளர்களையும் வரவழைத்து நிதி உதவி அளித்திருப்பது அவரது ஆன்மீக அரசியலுக்கு மேலும் ஒரு நிரூபணம்” என்கிறார்கள்.

ரஜினியோடு தொடர்பில் இருப்பதால் ராஜேந்திரபாலாஜி மீது கட்சி நடவடிக்கை என்ற நிலையில் இந்து கோயில் அர்ச்சகர்களுக்கு ராஜேந்திரபாலாஜியின் நிதி உதவி அவரது பாஜக பாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும் விருதுநகர் மாவட்டத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.

-ஆரா

திங்கள், 6 ஏப் 2020

அடுத்ததுchevronRight icon