மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

எம்.பி நிதி நிறுத்தம்: அதிபர் ஆட்சிக்குச் செல்கிறதா இந்தியா?

எம்.பி நிதி நிறுத்தம்: அதிபர் ஆட்சிக்குச் செல்கிறதா இந்தியா?

தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடங்கள் நிறுத்தப்படுவதற்கு எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஏப்ரல் 6) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் உள்பட எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் சம்பளம் 30 சதவிகிதம் குறைக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாகவும், இவற்றின் மூலம் 7,900 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். ஆனால், இதற்கு எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்பு எழத் தொடங்கியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தைப் பிடித்தம் செய்வோம் என்னும் அறிவிப்பை வரவேற்கிறேன். அதுபோலவே, ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானப் பணிகளை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சம்பளப் பிடித்தத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “கொரோனா வைரஸால் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஆகும் செலவீனங்களுக்கு நிதியைத் திரட்ட அரசுக்குப் பல வழிகள் உண்டு. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தைக் குறைப்பது போலவும், அதிபர் ஆட்சி முறை போன்ற ஒன்றை மறைமுகமாகப் புகுத்துவதுமாக உள்ளது” என்று சாடியுள்ளார்.

பிரதமரின் விளம்பரங்களுக்கும், தற்பெருமைகளுக்கும் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கும் விதமாக இருக்கும் திட்டங்களை நிறுத்தினாலே அதற்கான நிதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், “தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டதை வரவேற்பவர்களும், எனது கருத்தை எதிர்ப்பவர்களும் நகரங்களிலிருந்து எனது சிவகங்கை தொகுதியில் இருக்கும் கிராமப்புறங்களை வந்து பாருங்கள். உள்ளூர் மக்களுக்கு அந்த நிதி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என அங்கு தெரிந்துகொள்ளுங்கள்” என்றும் சாடியுள்ளார். .

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “30 சதவிகிதம் சம்பளப் பிடித்தம் என்ற அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். எனினும், தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு நிறுத்துவது சிக்கலானது. இது குறிப்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சித் தேவைகளை பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டு நிதி என்பது மிகவும் முக்கியமானது எனவும், எம்.பி.க்கள் தேவை அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், “கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், இதில் நாங்கள் அரசாங்கத்துடன் நிற்கிறோம். ஆனால், அது தொகுதி மக்களை பாதிக்கும் ஒரு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

செவ்வாய், 7 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon