மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி!

  திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி!

மின்னம்பலம்

மே 18 மாலை 5 மணிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் விபி. துரைசாமி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களை சூடாக்கியிருக்கிறது.

தமிழக பாஜகவின் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து, “தி.மு.க மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவராக அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கமலாலயம் அமைந்திருக்கும் சென்னை தி.நகர் பகுதியில்தான் வி.பி. துரைசாமியின் வீடும் அமைந்திருக்கிறது. நேற்று மாலை திமுக கரை வேட்டி கட்டியபடியே தனது மகனோடு புறப்பட்டு கமலாலயம் சென்ற வி.பி. துரைசாமி, முருகனை சந்தித்துப் பேசியதோடு சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். நேற்று மதியம் முதலே தன்னிடம் எதார்த்தமாக தொடர்புகொண்ட கட்சியினரிடம் கூட பேசவில்லை. நேற்று மாலை பாஜகவின் முகநூல் பக்கத்தில் இந்தத் தகவல் வெளிவந்ததும் பத்திரிகையாளர்கள் பலரும் தொடர்புகொண்டபோது துரைசாமியின் போன் ஸ்விட்ச்டு ஆப் ஆகியிருந்தது. வி.பி. துரைசாமிக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் நண்பர்கள் உண்டு. அவர்கள் துரைசாமியின் வேறு சில எண்களுக்குத் தொடர்புகொண்டும் அவரோடு பேச முடியவில்லை.

வி.பி. துரைசாமி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ராசிபுரத்தில் தேர்தலில் நின்றவர். இருவரும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் முருகனுக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்றிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

இன்று (மே 19) நாமக்கல்லில் வி.பி. துரைசாமிக்கு நெருக்கமான சீனியர் திமுகவினர் சிலர் அவரைப் பல முறை தொடர்புகொண்டபோது எடுத்துப் பேசியிருக்கிறார்.

“என்னண்ணே இப்படியெல்லாம் செய்தி வருது... உங்களுக்கு இங்க அடுத்த ரவுண்டுக்கு நல்ல நேரம் வரும்போது அதை மிஸ் பண்ணிடாதீங்கண்ணே’ என்று வி.பி. துரைசாமியின் நீண்ட கால நண்பர் சொல்ல அதற்கு விபி துரைசாமி சொன்ன பதில்,

‘தம்பீ... நாமக்கல் மாவட்டத்துல நான் துணைப் பொதுச் செயலாளர்னு இருக்கேன். காந்தி செல்வனை போட்டப்பயும் என்னைக் கேக்கல. இப்ப ராஜேஸ்குமாரை போட்டப்பவும் என்னைக் கேக்கலை. இதே நேரு மாவட்டமோ, ஐபி மாவட்டமோ இருந்தா இப்படி நடக்குமா தம்பி? இத்தனைக்கும் டெய்லி அறிவாலயம் நாந்தான முதல்ல வர்றேன். கலைஞர் இருக்கும்போதே, ‘யாருய்யா வந்திருக்கானு காலையில போன் பண்ணி கேப்பாரு. விபிதுரைசாமி வந்திருக்காருனு சொல்லுவாங்க. அவர்தான் 9 மணிக்கே வந்திடுவாராய்யா... வேறு யாரு வந்திருக்காங்கனு கேட்பாரு. தலைவர் காலத்துல இருந்து இப்பவும் நான் அப்படிதான் இருக்கேன். ராஜ்யபா சீட் தர்றேன்னு நம்பிக்கையா சொல்லியிருந்தாங்க. நான் நாமினேஷன் பேப்பர் வரைக்கும் ரெடி பண்ணி வச்சிருந்தேன். அப்புறம் என்னாச்சுனு உனக்கே தெரியும். எனக்கு இங்க மரியாதை இல்ல தம்பி. ராசிபுரத்தையும் காங்கிரசுக்குதான் தள்ளிவிடுவாங்க...’ என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார்.

விபிதுரைசாமி பாஜக தலைவரை சந்தித்த நிலையில் திமுக தலைமை கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

பாஜக தரப்பில் பேசினால்... “முருகன் தனது வேலையைத் தொடங்கிவிட்டார்” என்கிறார்கள்.

-வேந்தன்

செவ்வாய், 19 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon