மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

சோனியா ஆலோசனை: பங்கேற்கும் ஸ்டாலின்

சோனியா ஆலோசனை: பங்கேற்கும் ஸ்டாலின்

மின்னம்பலம்

சோனியா காந்தி நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 21ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இதனால் அன்றாடப் பணியாளர்கள் உள்பட பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் பசிக் கொடுமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தங்களது சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்கின்றனர்.

நடந்து செல்லும்போது பசி, சோர்வு காரணமாகவும் விபத்திலும் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் நாளை (மே 22) காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சிக் கூட்டத்தினை கூட்டுகிறார். நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதுபோலவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரிய ஜனதா தளத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இடப்பங்கீட்டில் திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என கடந்த ஜனவரி மாதம் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட, அது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி தொடர்பாக காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே கலந்துகொள்கிறார்.

எழில்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon