மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

பிஎம் கேர்ஸ்: சோனியா மீது வழக்குப் பதிவு!

பிஎம் கேர்ஸ்: சோனியா மீது வழக்குப் பதிவு!

மின்னம்பலம்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கொரோனா போன்ற அவசர நிலையை கையாள்வதற்காக இந்திய அரசு 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணம்' (PM CARES Fund) என்ற பெயரில் நிதித் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் நிதி அளித்து வந்தனர்.

இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம்சாட்டிய காங்கிரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன என்று விமர்சித்தது. மேலும், இவ்வாறு சேகரிப்படும் நிதியின் நோக்கம் குறித்தும், அது எங்கு சேகரிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியதோடு, சேகரிக்கப்பட்ட பணம் மோடியின் பல வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியுதவி செய்வதற்காக இருக்கும் என்று குற்றம்சாட்டியிருந்தது.

பிஎம் கேர்ஸ் நிதித் திட்டம் குறித்து தவறான தகவல் அளிப்பதாகக் கூறி சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் வழக்கறிஞர் பிரவீன் என்பவர் புகார் அளித்தார். இதுபற்றி பிரவீன் கூறுகையில், “காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிஎம் கேர்ஸ் பற்றி பதிவிடப்பட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் படமும் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த பக்கத்தில் பதிவேற்றப்பட்ட எந்தவொரு தகவலுக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பாவார். ஆகவே, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது” என்கிறார்.

இந்த நிலையில் சோனியா காந்தி மீது ஐபிசி பிரிவு 153 (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 505 (1) பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழில்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon