மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

மாநில வரிப்பங்கை உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்

மாநில வரிப்பங்கை உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்

மின்னம்பலம்

மாநில அரசின் வரிப் பங்கை கணிசமாக உயர்த்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களை விட குறைவான அளவே நிதி கிடைக்கிறது. வரி வருவாய் அதிகம் கிடைக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணி பட்டியலில் உள்ள நிலையில், குறைவான அளவு நிதி ஒதுக்கப்படுவது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “15ஆவது நிதி ஆணையத்தின் முறைகளின்படி மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவிகிதம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு வெறும் 64.65 சதவிகிதம் மட்டுமே நிதி கிடைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

நிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்டமிடலுக்காக 15ஆவது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 21) நடைபெற்று வருகிறது. 15ஆவது நிதிக் குழுவின் குறிப்பு விதிமுறைகள், மாநில மத்திய மாநில அரசுகளின் நிதி நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்ட வரைபடத்துக்கான பரிந்துரை அளிப்பது குறித்தும் இதில் முடிவெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய மாநிலங்களின் வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எழில்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon