மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 மே 2020

தூத்துக்குடி: மே 22... கடக்கும் நினைவேந்தலில் காத்துக் கிடக்கும் நீதி!

தூத்துக்குடி: மே 22... கடக்கும் நினைவேந்தலில்  காத்துக் கிடக்கும் நீதி!

ச.மோகன்

அந்தக் கறுப்பு நாள் மே 22இன் நினைவுகள் சிவக்கின்றன. தூத்துக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலம், நீர், காற்று ஆகியன ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதைத் தடுக்க அமைதியான முறையில், அறவழியில் போராடிய மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காவல் துறையின் கொடூரத் தாக்குதலுக்கும், ஒரு பெண்மணி பேருந்தில் பற்றிய தீயிலும் பலியானார்கள். பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

இக்கொடிய நிகழ்ச்சி நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. நீதி எட்டாக்கனியாகவே உள்ளது. அவர்கள் குடும்பமாகச் சென்றனர். அவர்கள் கைகளில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் இருந்தன. பெண்கள், குழந்தைகள், முதியோர், ஆண்கள் என நிராயுதபாணிகளாகப் போராடிய அந்த அப்பாவி மக்கள் மீது அநியாயமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினரும், துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்த வருவாய்த் துறையினரும், இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசு உயரதிகாரிகளும், இரண்டு ஆண்டுகளாகத் தண்டனையில் இருந்து விலக்கு பெற்றிருப்பது நீதி, கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியம் அளிக்கிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வுத் துறை, நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இதுவரை பெயரளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஆக்கபூர்வமாக எந்த முடிவும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றன.

மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) மந்த நிலை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2018 ஆகஸ்ட் 14 அன்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை நான்கு மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதன் பின்னரே அதுவரை விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி நகரக் காவல் துறையினர் மக்களை அடித்து சித்ரவதை செய்த நிலை முடிவுக்கு வந்தது.

மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு, கலவரம் நடந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், பிற அரசு அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர், கொடுங்காயமடைந்தோர் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை மேற்கொண்டுள்ளது. பொத்தாம் பொதுவாக ஒரு முதல் தகவல் அறிக்கையை மட்டுமே மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தும்கூட பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், காவல் துறை அதிகாரிகளின் பெயர் இடம் பெறவில்லை. இச்செயல் மத்திய புலனாய்வுத் துறையின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 2018 டிசம்பர் மாதத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. மத்திய புலனாய்வுத் துறையின் மெளனம் எப்போது கலையும் என்பது குடிமைச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்

2018 மே 22ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரணை செய்ய மறுநாள் மே 23 அன்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ‘ஒரு நபர் விசாரணை ஆணையம்’ அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விசாரணை இன்னும் தொடர்கிறது .

வழக்கமாக ஒரு நபர் ஆணையம் என்றாலே ஓராண்டிற்குள் விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதே வெகு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்ற சந்தேகம் வெகுமக்களிடம் விமர்சனமாக எழுகிறது. நிலைமையைப் பார்க்கும்போது இதுபோன்ற ஆணையங்கள் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் கண்துடைப்பாக அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற கேள்வி மக்களிடையே இயல்பாக எழுகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அலட்சியம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகளின் ஆணையம் தாமாக முன்வந்து தன் வழக்காகப் பதிவு செய்தது. அதே வேகத்தில் இந்த வழக்கை முடித்து வைத்தது. அதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறிய காரணம் யாதெனில், “பாதிப்புற்றோருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு நிலையைச் சீர் செய்ய தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்பவையே ஆகும்.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 பிரிவு 12 (b)இன் படி மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் அவ்வழக்கில் வாதாட முடியும். ஆனால், 16 பேர் உயிரிழந்த இத்துயர நிகழ்ச்சியில்கூட தேசிய மனித உரிமை ஆணையம் இச்சட்டத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்பதே காலம் பதிவு செய்துள்ள உண்மை.

பிற ஆணையங்களின் செயற்படா நிலை

கடந்த 2008 மே 22, 23 ஆகிய தேதிகளில் சுமார் 30 சிறுவர்கள் வல்லநாடு துப்பாக்கிச் சுடுதளத்தில் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்த நீதிபதி இதை உறுதி செய்தார். இதில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தலையீடு ஏதும் செய்யவில்லை. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியதாகக் கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் பெறவில்லை.

இதே போன்று கடந்த 2018 ஜூன் மாதம் தேசிய பட்டியல்படுத்தப்பட்டச் சாதிகள் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் துப்பாக்கிச்சூட்டில் பாதிப்புற்றக் குடும்பங்களை நேரில் சந்தித்து அதன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் பெறவில்லை.

அரசின் கவனத்துக்கு...

காவல் துறையின் தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்ட ஜஸ்டின் செல்வமித்திஸ் என்பவர் கடந்த 2018 அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இதற்கான இழப்பீடும், வேலைவாய்ப்பும் இதுவரை இவருடைய குடும்பத்தாருக்கு வழங்க பெறவில்லை. துப்பாக்கிச்சூட்டில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளராக ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிந்து, மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை வழங்கி, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பெற வேண்டும். செயற்கைக் கால் பொருத்தப்பட்டவர்கள், கொடுங்காயத்தால் பாதிப்புற்றோர் ஆகியோரின் வாழ்நாள் மருத்துவப் பராமரிப்புச் செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.

அரசின் சார்பு நிலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கி இறுதி நிலையில் உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் அன்று முதல் இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே தீவிரமாகச் செயல்படுகின்றனர். இது அரசின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத்தை பண்டாரம்பட்டி கிராம மக்கள் எதிர்த்தனர். இவர்கள் மீது சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கிராமத்தைச் சேர்ந்த சகாயம் கூறுகிறார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோருக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் செலுத்த பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் அடித்தவர்களுக்குக் காவல் துறை 21.5.2020 அன்று சம்மன் அனுப்பியுள்ளது. வணிகர் சங்கத்தினர் கட்டடத்தினுள் வைத்து நினைவேந்தல் செலுத்தக் கூடாது என்று காவல் துறை மிரட்டுவதாக வணிகர் சங்க மாநில இளைஞரணிச் செயலாளர் தெர்மல் ராஜா தெரிவிக்கிறார்.

இரண்டு ஆண்டுகளில் மக்கள் எதையும் மறக்கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களின் உயிரீகத்துக்கும், உடலுறுப்பு ஈகத்துக்கும், கொடுங்காயத்துக்கும் வழங்கப்பட்ட இழப்பீடும், வேலைவாய்ப்பும் நிவாரணமே தவிர இழைத்த கொலைக் குற்றத்துக்குத் தீர்வாகாது. நிகழ்த்தப்பட்டப் படுகொலைக்கு நியாயம் கேட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் மக்களோடு, களப்போராளிகளின் உறவுகளோடு நீதியும் காத்துக் கிடக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

மனித உரிமை ஆர்வலரான ச.மோகன், தற்சமயம் மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். மும்பையிலிருந்து வெளியாகும் ‘போல்டு இந்தியா’ தமிழ் நாளிதழின் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

அதிமுக வேட்பாளர்களின் கடைசி கட்ட கரன்சி திணறல்: எடப்பாடி ஷாக்! ...

4 நிமிட வாசிப்பு

அதிமுக வேட்பாளர்களின் கடைசி கட்ட கரன்சி திணறல்: எடப்பாடி ஷாக்!

அமைச்சரவையில் புதுமுகங்கள்: கொடைக்கானலில் ஸ்டாலின் ஆலோசனை! ...

4 நிமிட வாசிப்பு

அமைச்சரவையில்  புதுமுகங்கள்: கொடைக்கானலில் ஸ்டாலின் ஆலோசனை!

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

4 நிமிட வாசிப்பு

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

வெள்ளி 22 மே 2020