மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

இலவச மின்சாரம் ரத்து: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!

இலவச மின்சாரம் ரத்து: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!

இலவச மின்சாரம் ரத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே நிதியமைச்சர் தமிழக அரசின் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதன்படி பயன்படுத்துகிற இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சார வாரியம் கட்டாயம் வசூலிக்கவேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (மே 22) அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக்கூடாது என்பதே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் 24 லட்சம் பம்ப் செட்டுகளுக்கும், 11 லட்சம் குடிசைகளுக்கும், 2.1 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு வழங்கப்படுகிற கட்டணச் சலுகையும், 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிற இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை மத்திய அரசு செய்துவருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிறகுதான் நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ள அழகிரி,

“இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு எந்த வகையிலும் மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை தடுக்கமுடியாது என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “ இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது விவசாயிகளின் உரிமை. அதை பறிப்பதை விவசாயிகள் தங்களது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடி, தடுத்து நிறுத்துவார்கள். விவசாயிகளின் பிணத்தின்மீது நடந்துசென்று தான் மோடி அரசால் இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியுமே தவிர வேறுவகையில் முடியாது. தமிழக காங்கிரஸ் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கும்” என்று கூறும் அழகிரி,

“இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள், நகரங்கள், பேரூர்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பாக 5 பேருக்கு மிகாமல் கையில் கறுப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வருகிற மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக ஊரடங்கை கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எழில்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon