மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஓ.பன்னீரை மருத்துவமனை செல்ல வைத்த ‘12 ஆயிரம் கிலோ மீட்டர்’

ஓ.பன்னீரை மருத்துவமனை செல்ல வைத்த   ‘12 ஆயிரம் கிலோ மீட்டர்’

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மே 24 ஆம் தேதி மாலை சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி அதிகமானது மற்றும் கண் செக்கப்புக்காக சென்ற பன்னீர் மறுநாள் 25 ஆம் தேதி மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்.

பன்னீரை மருத்துவமனைக்கு அனுப்பியது ஊரடங்கால் ஏற்பட்ட அவரது சாலைப் பயணங்கள்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்திலும், தேனியிலும்.

“துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரை சென்னையில் இருந்து தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சரியாக 12 முறை சென்று வந்திருக்கிறார். சென்னை-டு பெரியகுளம் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர். ஒவ்வொரு முறையும் அப் அண்ட் டவுன் ஆயிரம் கிலோ மீட்டர் காரிலேயே பயணம் செய்திருக்கிறார். இது போதாதென்று மாவட்டத்துக்குள் ஆய்வுக் கூட்டங்களுக்காகவும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக மலைப் பகுதிகள் உட்பட குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் இருநூறு கிலோ மீட்டர் காரில் சுற்றியிருப்பார்.

தேர்தல் பிரச்சாரம் போன்ற சமயங்களில் ரேஞ்ச்ரோவர் காரை பயன்படுத்தும் பன்னீர் செல்வம் சமீப காலமாக இன்னோவாவையே பயன்படுத்துகிறார். காரிலேயே தொடர்ச்சியாக மூன்று நாட்கள் எல்லாம் சுற்றியிருக்கிறார் பன்னீர் செல்வம். அதெல்லாம் ஒரு காலம். இப்போது ஊரடங்கு காரணமாக விமானம், ரயில் எதுவும் இல்லாததால் 12 முறை சென்னை-தேனி-சென்னை முழுக்க முழுக்க காரிலேயே சுற்றியதால் முதுகுவலி அதிகமாகிவிட்டது. தினந்தோறும் யோகா செய்யும் பன்னீர் செல்வம் இதுபோன்ற பயணங்களால் தொடர்ந்து யோகாவும் செய்யவில்லை. நீண்ட நாட்களாகவே சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார் பன்னீர். இந்த நிலையில்தான் கண்ணுக்காகவும், முதுகு வலிக்காகவும் சென்ற துணை முதல்வருக்கு மற்ற சோதனைகளும் செய்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சினையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள் டாக்டர்கள். இது வழக்கமான செக்கப்தான். முதல்வர் வந்து பார்த்ததால்தான் பரபரப்புச் செய்தியாகிவிட்டது” என்கிறார்கள்.

-ஆரா

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon