மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

காவல்துறையின் பாரபட்சம்: டிஜிபியிடம் திமுக புகார்!

காவல்துறையின் பாரபட்சம்: டிஜிபியிடம் திமுக புகார்!

அதிமுக அமைச்சர்களாலும், அக்கட்சியினராலும் திமுகவினர் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் செய்யப்பட்டு, அந்தப் புகார்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த திமுக மாசெக்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டபடி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழக்கறிஞர் குழு ஒன்றும் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (மே 27) திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று திமுகவினர் புகார் அளித்துள்ளனர். நேருவுடன் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., திமுக சட்டத்துறைச் செயலாளர் ஆர்.கிரிராஜன், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ப.முத்துகுமார், வி.அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்புகாரில், “தமிழக காவல்துறை ஆளுங்கட்சியின் உத்தரவுப்படி நடந்து திமுகவினரின் மீது கொடுக்கப்படும் புகார்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்கின்றது. கண்மூடித்தனமாக அவர்களைக் கைது செய்கிறது. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுகவினர் மீதும், பாஜகவினர் மீதும் முறையான முகாந்திரங்களின் அடிப்படையில் புகார் கொடுக்கின்றபோதும் அவற்றின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இது தொடர்பாக, லலிதா குமாரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கட்டளையை தமிழக காவல்துறை மீறுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 217 மற்றும் 218 பிரிவுகளின் விதிமுறைகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஆளும் கட்சியின் உறுப்பினர்களையும் அதன் கூட்டாளிகளையும் பாதுகாப்பதைப் பற்றி மாநில காவல்துறை அதிகாரிகள் உணர வேண்டும். தமிழக காவல்துறையின் இந்த முற்றிலும் சட்டவிரோத அணுகுமுறையை நாங்கள் அஞ்சுகிறோம். நாங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் காவல்துறையில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே புகார்களை நாங்கள் அளிக்கிறோம். தமிழக காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் நமது ஜனநாயக மாளிகையை வீழ்த்தும். எனவே, மாநிலத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முறையான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,

திமுகவினர் தங்கள் அடிப்படை பேச்சு உரிமை, எழுத்துரிமையின் அடிப்படையில் அரசியல் பிரச்சாரத்தை குறிப்பாக சமூக ஊடகங்களில் மேற்கொண்டதற்காக பொய் வழக்குகள் புனைவதைத் தவிர்க்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல் கண்மூடித்தனமாகவும், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட முறைகளிலும் அநியாயமாக கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்படும்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை எனில் ஏன் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தைப் புகார் தாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக, இந்த விஷயத்தில் உங்கள் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்” என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார் கே.என். நேரு.

இதேபோல திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் தனியாக இன்னொரு புகாரை அளித்துள்ளார் கே.என். நேரு.

-வேந்தன்

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon