மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் மாசெக்கள் மாற்றம்... நடப்பது என்ன?

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் மாசெக்கள் மாற்றம்... நடப்பது என்ன?

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“அதிமுகவில் மாஸ் ஆன மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெற இருப்பதாக சேலம் முதல் தேனி வரை ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களிலும் பேச்சு இருப்பதால் இந்த மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. ஜெயலலிதா காலமான பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், அதன்பின் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோதும் சசிகலா கட்சியில் சில மாற்றங்களையும் பல நியமனங்களையும் செய்தார்.

சசிகலா சிறைக்குச் சென்றதும் எடப்பாடி தனி வழியில் சென்று தினகரனை எதிர்க்க ஆரம்பித்தார். அதன் பின் பன்னீரும், எடப்பாடியும் அணி சேர்ந்தார்கள். அவர்கள் சேர்ந்த கொஞ்ச நாளில் இரு அணிகளின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுகவின் பொதுக்குழு நடந்தது. அதற்குப் பின் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடக்கவில்லை.

அப்போது ஆட்சியைக் காப்பாற்றவும் தக்கவைக்கவும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால் பெரிய அளவு கட்சி மாற்றங்களில் கவனம் செலுத்தவில்லை. எடப்பாடி முதல்வராகி மூன்று வருடங்கள் முடிந்து நான்காவது வருடம் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாவது வருடம் தொடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தன் நாற்காலியை வலுப்படுத்திக்கொண்டு இப்போது கட்சியில் சில மாற்றங்களுக்காக தயாராகிவிட்டார் எடப்பாடி. இதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீருடனும் பேசிவிட்டார் என்கிறார்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே ஐந்து தொகுதிகள் அதிமுக வெற்றிபெற்றிருக்க வேண்டியவை என்று உளவுத் துறை தேர்தல் முடிவுக்குப் பின் ஒரு ரிப்போர்ட் கொடுத்து தோல்விக்குக் காரணம் கட்சியின் நிர்வாகிகள்தான் என்றும், பணத்தை முழுமையாக பட்டுவாடா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியது. அதற்குப் பின் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பல இடங்களில் மிகவும் கஷ்டப்பட்டுதான் வெற்றியைத் தொட முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் பல மாவட்டச் செயலாளர்கள் மீதான பர்ஃபாமென்ஸ் ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டது. அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் யார் என்ன சொல்வார்களோ என்ற சலசலப்பிலேயே தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

இந்த நிலையில் மாசெக்கள் மாற்றம் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில்... அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், முக்கியமான அமைச்சர்களும்கூட தத்தமது பகுதியில் தங்களது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதைக் கடுமையாக எதிர்க்கின்றனர் அல்லது தங்கள் ஆதரவாளர்களுக்கு புதிய பதவிகள் வழங்கவும் வற்புறுத்துகின்றனர்.

இந்த நிலையில் பதவி இழந்த அமைச்சர் ஒருவர் சில நாட்களுக்கு முன் முதல்வரைப் பார்க்கப் போயிருக்கிறார். அவர் முதல்வரிடம், ‘மறுபடியும் எனக்கு பதவி கொடுத்தீங்கன்னா கட்சிக்கு டொனேஷன் எவ்வளவு வேணுமானாலும் தரத் தயாரா இருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார். தயாராகவே '5சி'யையும் வைத்திருந்தாராம். இதைக் கேட்டு டென்ஷனான முதல்வர் அவரை கோபமாகப் பேசி அனுப்பிவிட்டதாகத் தகவல். ஆக இதில் இருந்து பணத்தை அடிப்படையாக வைத்து பதவி போடவும் எடப்பாடி தயாரில்லை என்று தெரிகிறது.

அதாவது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் தனது ஆதரவாளர்களே மாவட்டச் செயலாளர்களாக, முக்கிய நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி. அதற்காக ஓ.பன்னீருடன் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தனது பிடியையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ட பட்டியல் பன்னீர் மருத்துவமனைக்குச் சென்றதால் சற்றே தாமதமாகிறது என்கிறார்கள். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்ற அறிவிப்பு எப்போது வந்தாலும் சலசலப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon