மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன்

செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன்

கரூர் கலெக்டர் அன்பழகனை மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தன்னை மிரட்டியதாக அரவக்குறிச்சி எம்,எல்.ஏ.வும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டர் அன்பழகன் கொடுத்த புகாரில், செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மே 23 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்.... இதில் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

செந்தில்பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதுமே அவரைக் கைது செய்யுமாறு ஆளுந்தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் சட்ட ரீதியாக அதில்

சிக்கல்கள் இருப்பதாக சொன்னதால் சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் 26 ஆம் தேதி மாற்றப்பட்டார் என்றும் தகவல்கள் வந்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் ஜாபர் சேட் மாற்றம்: பின்னணியில் செந்தில்பாலாஜி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையே இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற சந்தேகத்தில் செந்தில்பாலாஜி தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு மே 26 அன்று விசாரணைக்கு வந்தது,.

செந்தில்பாலாஜி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரபாகரன், “செந்தில்பாலாஜி ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கு ஆய்வுக் கூட்டங்கள் பற்றிய தகவல் தரப்படவில்லை என்று கூறியுள்ளார். இது மிரட்டல் ஆகாது. ஆனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடார்.

அரசுத் தரப்பில் வாதாடிய தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “செந்தில்பாலாஜி மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் முன் ஜாமீன் எடுத்துக் கொண்டு சட்டத்தை மீறி செயல்படலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். மாவட்ட கலெக்டர் என்பவர் மாவட்ட குற்றவியல் நடுவரும் கூட. எனவே செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் இந்தத் தீர்ப்பை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இன்று செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி அதற்காக சில நிபந்தனைகளையும் விதித்தார்,

“கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும். கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்” ஆகிய நிபந்தனைகளை விதித்து செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

-வேந்தன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon