மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

தமிழகத்தில் பசி: குழப்பும் அமைச்சர் காமராஜ்

 தமிழகத்தில் பசி: குழப்பும் அமைச்சர் காமராஜ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று (மே 28) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தலைமைச் செயலாளரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களைப் பற்றி விளக்கமாக பேசினார்.

தமிழகத்தில் பசியே இல்லை. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறிய அமைச்சர் காமராஜ் அதற்குப் பின் கூறிய கருத்துகள் அவரது கருத்துக்கே முரண்பாடாக அமைந்திருக்கின்றன.

“தமிழகத்தில் 99 சதவிகிதம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய்  பணமும், விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கால கட்டத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களுக்குக் கூட ரேஷன் பொருட்களை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் சாப்பாடு இல்லை என்ற நிலையே இல்லை. 65 நாட்கள் முடங்கியிருந்தாலும் அனைவருக்கும் உணவு அளித்திருக்கிறது தமிழக அரசு. சமூக உணவுக் கூடங்கள் மூலமும் உணவு வழங்கி வருகிறோம்.

முதல்வரின் இந்த நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அவர்கள் இயக்கத்தின் சார்பில் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தைத் தொடங்கி ஒரு தொலைபேசி எண்ணை அறிவித்தார்” என்று சொன்ன அமைச்சர் காமராஜ், திமுக தலைவரின் வீடியோவை ஓடவிட்டார்.

“தமிழக அரசு செயல்படவில்லை என்பது போல சொல்லி அரசியல் நாடகம் நடத்தினார் ஸ்டாலின். 15 லட்சம் அழைப்புகளில் 14 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கியுள்ளோம் என்றெல்லாம் ஸ்டாலின் சொன்னார். அதன் பின் திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள் தலைமைச் செயலாளரைச் சந்தித்து ஒரு லட்சம் மனுக்களை அளித்திருப்பதாக சொன்னார்கள்” என்று குறிப்பிட்ட காமராஜ், டி.ஆர்.பாலு பிரஸ்மீட் வீடியோ காட்சிகளையும் ஓடவிட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர், “திமுகவால் தீர்க்க முடியாத போக்குவரத்து, சிறு தொழில் போன்ற மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்ததாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஒரு லட்சம் மனுக்கள் என்று சொன்னாலும் 98 ஆயிரத்து 752 மனுக்கள் கொடுத்தார்.  இதை முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பினார் தலைமைச் செயலாளர். தனிப் பிரிவில் மனுக்களை ஆய்வு செய்கிறார்கள். அந்த மனுக்களில் ஒரு மனுவில் கூட போக்குவரத்து வசதியோ சிறு குறு நடுத்தர தொழில் பற்றியோ இல்லை. பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.

எல்லாமே ட்ரை ரேஷன் உணவுத் தேவைகள், உணவுப் பொருட்களும்  இருக்கிறது. எங்கள் துறைக்கு அனுப்பினார்கள். எங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்படுகிறது. எல்லா மாவட்டங்களில் இருந்தும் ரிப்போர்ட் வாங்கிவிட்டோம்” என்று குறிப்பிட்டார் உணவுத் துறை அமைச்சர்.

திமுக எம்பி டி.ஆர்.பாலு தவறான தகவலை கொடுத்திருக்கிறார் என்று கூறினார் அமைச்சர் காமராஜ். ஆனால் அமைச்சரின் கூற்றிலும் முரண்பாடுகள் இருக்கின்றன.

தமிழகத்தில் யாருக்குமே பசியில்லை என்று கூறிய அமைச்சர் காமராஜ், அடுத்து, “திமுக கொடுத்த 98 ஆயிரத்து 752 மனுக்களில் எல்லாமே டிரை ரேஷன், உணவுத் தேவைகள், உணவுப் பொருட்களுக்காக கொடுக்கப்பட்ட மனுக்கள்” என்று கூறுகிறார். இதன் மூலம் தமிழகத்தில் பசித்த சுமார் 90 ஆயிரம் பேர் திமுகவுக்கு மனு அளித்திருக்கிறார்கள் என்று நேரடியாகவே சொல்கிறார் அமைச்சர்.

அதேநேரம் பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதியில் ஒருங்கிணைவோம் வா திட்டத்துக்கு எதிரான சிலரது பேட்டிகளை எடுத்து அவற்றை காட்சிகளாக ஒளிபரப்பினார் அமைச்சர். ‘நாங்கள் விண்ணப்பிக்கவே இல்லை’ என்று சிலரும், ‘திமுகவுக்கு மனு கொடுத்தும் அவர்கள் கொடுக்கவில்லை’ என்று சிலரும் அந்த வீடியோவில் கூறுகிறார்கள்.

உணவுத் துறை அமைச்சர் காமராஜின் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தமிழகத்தில் பசி இருக்கிறதா, இல்லையா என்று அரசே குழப்பமான தகவலை வெளியிட்டிருக்கிறது.

-வேந்தன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon