மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

ஸ்பீக் அப் இந்தியா: ட்ரெண்டிங் ஆக்கிய காங்கிரஸ்

ஸ்பீக் அப் இந்தியா:  ட்ரெண்டிங் ஆக்கிய காங்கிரஸ்

கொரோனா ஊரடங்கின் நான்காம் கட்டம் மே 31 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மே 28) காங்கிரஸ், ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை சமூக தளங்களில் முன்னெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ட்விட்டரில், #speakupinida என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது.

இதன்படி, “கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் வங்கி கணக்கில் ரூ.10000/- மத்திய அரசு உடனே செலுத்த வேண்டும். சிறு தொழில்களுக்கு கடனாக அல்லாமல் நிதியுதவி வழங்கப்படவேண்டும். வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டணமின்றி அவர்களுடயை சொந்த மாநிலங்களுக்கு இரயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கு நீடிக்க வேண்டும்” என்பதை ஒவ்வொருவரும் பேசி வீடியோவாக எடுத்து சமூக தளங்களில் மே28 காலை 11 மணி முதல் பதிவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அனைத்து மாநிலத் தலைமைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதை ஒட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், “மோடி அரசை வலுவிழக்க செய்யும் பல வழிகளில் இந்த பரப்புரையும் ஒன்று. இலங்கைக்கு பாலம் அமைக்க இராம பிரானுக்காக அணில் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செயல் பட்டதைப்போல, மோடிக்கு எதிரான இந்த பரப்புரையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டியது தேசியத் தோழர்களின் கடமையாகும். சமூக ஊடகங்களின் மூலம் நாளை (28.5.2020) காலை 11 முதல் மதியம் 2 வரை நேரலையில் இதை பதிவு செய்தல் வேண்டும்” என்று நேற்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு என்பது மக்களுக்கு உடனடி நிதியுதவியை எந்த விதத்திலும் தரவில்லை என்ற விமர்சனத்தை வைத்துதான் காங்கிரஸ் இந்த ஸ்பீக் அப் இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

அதன்படியே இன்று (மே 28) சோனியா காந்தி, ராகுல் காந்தியில் தொடங்கி காங்கிரஸ் கடைகோடித் தொண்டர்கள் வரையிலும், மற்றும் கட்சி சாராத பலரும் இந்தக் கோரிக்கைகளை வீடியோவாக இன்று சமூக தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “தங்கள் வீட்டிற்கு புறப்படும் புலம்பெயர்ந்தோருக்கு இலவச மற்றும் பாதுகாப்பான பயணத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பமும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்திற்கும் தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள ரூ .10,000 வழங்க வேண்டும், ”என்று ஒரு வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், “கடந்த ஒன்றரை மாதத்தில் குறைந்தது 90 லட்சம் பேருக்கு நாங்கள் எங்கள் சொந்த திறனில் உதவி செய்துள்ளோம். இந்த சூழ்நிலைகளில் போராடும் மக்களுக்காக குரல் எழுப்ப ட்விட்டர், பேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளத்திற்கும் செல்லுமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் ” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுதும் தமிழ் உட்பட பல மாநில மொழிகளிலும் காங்கிரஸின் இந்த ஸ்பீக் அப் இந்தியா பிரச்சாரம் சமூக தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது,

-வேந்தன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon