மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் டின்னர்! ஆடும் ஆட்சி!

எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் டின்னர்!   ஆடும் ஆட்சி!

கர்நாடகாவில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அடுத்தடுத்து ராஜினாமா செய்ய வைத்து காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை கடந்த வருடம் ஜூலை மாதம் கவிழ்த்தது பாஜக. முதல்வர் குமாரசாமி பதவி விலகும்போது, “ஒவ்வொருவருக்கும் ஒரு ஜட்ஜ்மென்ட் டே வரும். அப்போது கடவுளின் முன் தனியே நிற்க வேண்டிவரும். உங்களுக்கென வழக்கறிஞர்களோ, ஆதரவாளரகளோ வர மாட்டார்கள். நீங்கள் செய்த பாவத்துக்கு கடவுளிடம் பதில் கூற வேண்டும்’ என்று உருக்கமாகப் பேசினார்.

அதன் பின் பாஜக சார்பில் முதல்வராக எடியூரப்பா 2019 ஜூலை 29 ஆம் தேதி பதவியேற்றார். அன்று கர்நாடக சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, “இந்த அரசு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைந்த அரசு. மக்கள் தீர்ப்புக்கு எதிரான அரசு. உங்களுக்கும் (எடியூரப்பா) அதிருப்தியாளர்கள் முளைப்பார்கள். உங்கள் அரசும் நிலையற்ற் அரசே” என்று கூறினார்.

சித்தராமையாவின் வார்த்தைகள் பலிப்பது மாதிரி, மே 28 ஆம் தேதி இரவு பெங்களூருவில் வடக்கு கர்நாடகாவைச் சேந்த எம்.எல்.ஏ.க்கள் டின்னருடன் கூடிய ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இதையடுத்து பாஜக முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி மீது அக்கட்சிக்குள்ளேயே அதிருப்தியாளர்கள் குழு உருவாகியிருப்பது உறுதியாகிவிட்டது.

ஜூன் மாதம் கர்நாடகத்தில் ராஜ்ய சபா தேர்தல், சட்ட மேலவை தேர்தல் ஆகியவை வரும் நிலையில் எம்,.எல்.ஏ.க்களின் ரகசியக் கூட்டம் நடைபெறுவது கவனிக்கத் தக்கது. மூத்த பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய அமைச்சர் உமேஷ் கட்டி, பசன கவுடா பாட்டீல் யத்னல், முர்கேஷ் நிரானி ஆகியோர் தலைமையில் ராஜு கவுடா, தத்தாத்ரேயா பாட்டீல், ஹலப்பா ஆச்சார், பரன்னா முனவள்ளி, சித்து சவாடி, மகாதேவப்ப யேதாவாட், சிவராஜ் பாட்டீல், பாலச்சந்திர ஜர்கிஹோலி உள்ளிட்ட 13 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் இருக்கும் உமேஷ் கட்டியின் வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இவர்களில் பலர் அமைச்சர் பதவியை நோக்கமாகக் கொண்டவர்கள்.

இந்தக் கூட்டம் பற்றி முதலில் உமேஷ் கட்டியும், பசன கவுடா பாட்டீலும், ‘ஊரடங்கு காரணமாக சந்திக்க முடியாததால் இப்போது சந்தித்தோம். வேறு எதுவும் அரசியல் முக்கியத்துவம் இல்லை’ என்று கூறினார்கள். ஆனால் பாட்டீல் ஒருபடி மேலே போய், “முதல்வர் எடியூரப்பாவுடன் நான் வருத்தத்தில் இருக்கிறேன். ஆனாலும் அதற்கும் இந்தக் கூட்டத்துக்கும் தொடர்பில்லை” என்றார். மேலும் அவர், “எனக்கு தலைவர்கள் மோடி, அமித் ஷா, நட்டாதான். எடியூரப்பா வெறும் முதலமைச்சர்தான்’ என்றும் கூறியிருக்கிறார். முதல்வரை மாற்ற முயற்சிக்கிறீர்களா என்று ஊடகங்களின் கேள்விக்கு, “அதை நான் எங்கள் உயர் தலைவர்களிடம்தான் சொல்லுவேன்” என்றும் கூறி எடியூரப்பாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் மே 29 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை தனது ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள எடியூரப்பா, “நான் ஏதோ அவசர எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டப்போவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அது உண்மைக்கு வெகுதூரமானது. அப்படி ஒரு கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார். அதிருப்தியாளர்களுடன் மோதிப் பார்க்கத் தயார் என்ற சிக்னலையே அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இருக்கும் நிலையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கட்சிக்குள் எழுந்திருக்கும் அதிருப்திகள் கடும் சவாலை உண்டாக்கியிருக்கின்றன என்கிறார்கள் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.

-வேந்தன்

சனி, 30 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon