gபொருளாதாரம் வளர்ச்சியடையும் : பிரதமர்

politics

பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு 1895ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 125 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் சிஐஐ அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (ஜூன் 2) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது முன்பாக இரண்டு சவால்கள் உள்ளன. கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நம் நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், மறுபுறம், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக, அரசு உடனடி முடிவுகளை எடுத்துள்ளது. நீண்ட காலத்திற்கு நாட்டுக்கு உதவும் முடிவுகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு அதனை துரிதப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், “அன்லாக் 1 மூலம் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளை நாம் திறந்துள்ளோம். நமது நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சுரங்கத் துறை, எரிசக்தி துறை, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், அரசின் நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் கூறினார்.

உலகம் உண்மையான மற்றும் நம்பகத்தன்மையான கூட்டாளியைத் தேடுகிறது என்று குறிப்பிட்ட அவர், “உலகம் தற்போது இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு அதற்கான ஆற்றல், வலிமை மற்றும் திறன் உள்ளது. உள்நாட்டு தொழில்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள் உதவ வேண்டும். அனைத்து துறைகளிலும் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது மேட் இன் இந்தியாவாக இருப்பது, மேட் இன் வோர்ல்ட் ஆக மாற வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்த தொழிலாளர் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள 150 நாடுகளுக்கு இந்தியா மருத்துவப் பொருட்களை வழங்கியது. சுயசார்பு இந்தியாவை நனவாக்கி நமது வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, கட்டமைப்பு, புதுமை ஆகிய 5 பண்புகளும் நமக்குத் தேவை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் நமது நாட்டின் பொருளாதார இயந்திரங்கள். இவைகள் மக்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அளிக்கும். விவசாயிகளின் நலனுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பொருட்களை தற்போது ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்க முடியும்” என்றும் பிரதமர் பேசினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *