xநவீன தமிழகத்தின் தந்தை: கலைஞரின் பிறந்தநாள்!

politics

கலைஞரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமுதாயச் சிந்தனையானாலும், அரசியல் ஆனாலும், ஆட்சியானாலும் கலைஞர் பதித்துச் சென்ற முத்திரைகள் என்றும் நிலைக்கக் கூடியவை. சமத்துவபுரங்கள் கொண்டுவந்து அனைத்து சாதியினரையும் ஒரே இடத்தில் தங்கவைத்த கலைஞரின் நடவடிக்கை என்றென்றும் நினைவுகூரத்தக்கது. கலைஞர் கொண்டு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள் அதனை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நவீன தமிழகத்தின் தந்தை என்று சமூக வலைதளங்களில் #FatherOfModernTamilnadu,#hbdkalaingar-என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி, கலைஞர் பிறந்தநாள் வாழ்த்து பதிவுகள் இடப்பட்டு வருகின்றன. இவை இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடம் மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், கலைஞர் நினைவிடத்தில் திமுகவைச் சேர்ந்த அசோக் குமார், மகாலட்சுமி ஆகியோரின் திருமணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு ஸ்டாலின் தலைமையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் திமுகவினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞர் உடலால் மறைந்தார் எனினும், உணர்வால், சாதனைகளால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கொள்கையால் வாழும் கொற்றவர் அவர். பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் எவர் சிந்தனையிலும் உதிக்காத இந்தக் கருத்து சாதனை காலம் உள்ளவரை கணீர் கணீர் என ஒலித்துக் கொண்டே இருக்கும். கலைஞர் வாழ்கிறார் கொள்கையால் இலட்சியத்தால் சாதனைகளால் வாழ்கிறார் – வாழ்ந்து கொண்டே இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்” என்று வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *