மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன் மீது ஸ்டாலினுக்கு என்ன கோபம்?

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன் மீது ஸ்டாலினுக்கு என்ன கோபம்?

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“திமுக பொருளாளராகவே துரைமுருகன் தொடர்வார் என்று ஜூன் 3ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு திமுகவில் மட்டுமல்ல. அதிமுக, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் மேல் மட்டங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தற்போது திமுகவில் இருக்கும் சீனியர்களிலேயே முதன்மையானவர் துரைமுருகன். சீனியாரிட்டியை முதன்மைப்படுத்தியே பல பொறுப்புகளை நிரப்பிவரும் ஸ்டாலின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கும் சீனியாரிட்டிபடி துரைமுருகனையே தேர்ந்தெடுத்தார். ஆனால் மார்ச் 29ஆம் தேதி திட்டமிட்டபடி திமுகவின் பொதுக்குழு நடந்திருந்தால் இந்நேரம் துரைமுருகன் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்திருப்பார். ஆனால், கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு இப்போது வாய்ப்பில்லை என்பதால்தான், துரைமுருகனிடம் மீண்டும் பொருளாளர் பதவியையே கொடுத்து அறிவித்துள்ளார் ஸ்டாலின். அதாவது பொதுச் செயலாளர் தேர்தல் என்பது இனி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் என்பதே திமுக தலைமையின் திட்டம்.

துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்குவது என்ற ஸ்டாலினின் எண்ண ஓட்டம் திசை மாறியது எப்படி, துரைமுருகன் மீது ஸ்டாலினுக்கு என்ன கோபம் என்றெல்லாம் திமுகவின் மேல் மட்டத்தில் விசாரித்தபோது சில திடுக் தகவல்களைச் சொல்கிறார்கள்.

‘பொதுவாகவே சட்டமன்றம் நடக்கும் நாட்களில் துரைமுருகன் மன்றத்துக்கு ஸ்டாலின் வரும் முன்பே வந்துவிடுவார். ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் செல்வார். சீனியர் என்பதால் ஸ்டாலினும் இதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசுவதாக ஒரு தகவல் அடிக்கடி ஸ்டாலின் காதுகளுக்குச் சென்றது. சட்டமன்றத்தில் எதிரெதிர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொள்வது இயல்பானதுதான் என்பது நீண்ட கால சட்டமன்ற அனுபவம்மிக்க ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனபோதும் தான் மன்ற வளாகத்தில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சந்திப்புகள் நடப்பதாக ஸ்டாலினுக்குத் தகவல்கள் தொடர்ச்சியாகச் செல்ல, ஒரு நாள் துரைமுருகனிடம் அவர் கேட்டே விட்டார். அதற்கு துரைமுருகன், ‘அட ஒண்ணுமில்லங்க... ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்தேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் துரைமுருகனும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துக் கொள்வது பற்றி ஆளுங்கட்சியில் சில சோர்ஸ்களிடம் இருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின். அது அவரால் நம்ப முடியாததாகவே இருந்துள்ளது. ‘கட்சியில முக்கியமானவரு சீனியரு. கலைஞருக்கு ரொம்ப வேண்டியவர். அவரே அடுத்து திமுக ஆட்சிக்கு வருமானு சந்தேகமா இருக்குனு என்கிட்ட வெளிப்படையா சொல்றாரு. மக்கள்கிட்ட நமக்கு நல்ல பேரு இருக்குனு சொல்றாரு’ என எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் துரைமுருகனைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதே ஸ்டாலினுக்குக் கிடைத்த தகவல். அப்போதும் இதை நம்புவதா, நம்பாமல் விடுவதா என்றே ஸ்டாலினுக்குப் புரியவில்லை. இதுபற்றி துரைமுருகனிடம் அவர் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

அதன் பிறகு, ‘அரசுப் பொதுப்பணித் துறையின் நூற்றைம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள கான்ட்ராக்டுகள் துரைமுருகன் கேட்ட இடங்களில், அவர் கூறியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசோடு அவர் அவ்வளவு அனுசரணையாக இருக்கிறார்’ என்றும் தகவல்கள் ஸ்டாலினுக்கு வேலூரில் இருந்து சென்றிருக்கின்றன. அதையும் சரிபார்த்துக் கொண்ட ஸ்டாலின், அந்த விவகாரம் பற்றி துரைமுருகனிடம் ஏதும் கேட்கவில்லை.

இந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் துரைமுருகனைப் பொதுச் செயலாளர் ஆக்குவதைப் பற்றி சிலர் தன்னிடம் கூறிய தகவல்களையும் ஏற்கனவே தனக்கு வந்த தகவல்களையும் சேர்த்து வைத்து வேகமாக ஒரு முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள்.

இதுகுறித்தெல்லாம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் துரைமுருகன் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ‘துரைமுருகனுக்குப் பொதுச் செயலாளர் பதவி வழங்குவதில் ஸ்டாலினுக்கு முழு உடன்பாடு இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் நேரத்தில் கட்சியில் எந்த கீறலும் விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், ஸ்டாலினின் குடும்பத்தினர்தான் துரைமுருகனைக் கட்சியின் உச்சப் பதவிக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கைக்குள் இருக்கும்படியானவர்கள் கட்சியின் மேல் மட்டத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் கட்டமைத்திருக்கும் காரணங்கள்தாம் இவை. துரைமுருகன் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக அரசியலில் இருப்பவர். சட்டமன்றங்களில் எத்தனையோ பேரைப் பார்த்துவிட்டார். தன் மேல் இப்படி தகவல் கிளப்பி விடுபவர்களின் தாத்தாக்களோடு மோதி வென்றவர் துரைமுருகன். எம்ஜிஆர் அழைத்தே செல்லாதவர். எடப்பாடியைப் பார்த்து என்ன சாதித்துவிடப் போகிறார்? ஆனாலும் மிகப்பெரிய ஒரு வருத்தம் கலைஞர் பிறந்தநாளில் முழுக்க முழுக்க கலைஞர் பற்றிய நினைவுகளிலேயே இருப்பவருக்கு, மதியத்துக்குப் பிறகு பெரியதொரு வலியைக் கொடுத்துவிட்டது தலைமை’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைனுக்கு போனது வாட்ஸ்அப்.

பொதுச் செயலாளர் பதவி... துரைமுருகனுக்கு ஷாக்!

கதைய முடிச்சிட்டாங்கய்யா.... கலங்கிய துரைமுருகன்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon