மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு!

இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு!

மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவிகிதம், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீடான 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நடைமுறை முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, பாமக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “மருத்துவம் மற்றும் பல் அறிவியல் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிசி மற்றும் பிசி வகுப்பினருக்கான 50% ஒதுக்கீட்டை அமல்படுத்தாததன் மூலம் தமிழக மக்களுக்கு நியாயமான கல்வி கிடைப்பதற்கான உரிமையை மத்திய அரசு மீறியுள்ளது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “ஒவ்வொரு மாநிலமும், இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27% இடத்தை ஓபிசி பிரிவுக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.

ஆகவே, தமிழகத்திலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடத்தை ஒபிசி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். நடப்பாண்டில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசோடு, அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

எழில்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon