மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

நான் பிரதமராக இருந்திருந்தால்... ஊரடங்கு பற்றி ராகுல்

நான் பிரதமராக இருந்திருந்தால்... ஊரடங்கு பற்றி  ராகுல்

உலகப் போரின்போது கூட இந்த அளவு ஊரடங்கு அமலில் இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். ஏப்ரல் 30 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் விவாதித்தார். இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் உரையாடினார்.

அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜுடன் இன்று (ஜூன் 4) ராகுல் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “உலகப் போரின்போது கூட இந்த அளவுக்கு கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. அப்போது, சில நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது ஒரு தனித்துவமான மற்றும் அழிவுகரமான நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களால் எங்கேயும் செல்ல முடியவில்லை” என்று வேதனைத் தெரிவித்தார்.

நீங்கள் இருந்திருந்தால் இந்த நேரத்தில் என்ன செய்திருப்பீர்கள் என்று ராஜீவ் பஜாஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி, “மத்திய அரசு ஒரு செயல்படுத்துபவராக செயல்பட்டிருக்கும். கொரோனாவுக்கு எதிரான போர் மாநில முதலமைச்சர்களால் நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் நடந்தது என்னவென்றால் மத்திய அரசு பின்வாங்கிவிட்டது. தற்போது அதற்கான காலமும் கடந்துவிட்டது” என்றவர் தொடர்ந்து,

“இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்றுதான். கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஊரடங்கை தளர்த்திவரும் ஒரே நாடு இந்தியாதான்” எனக் குற்றம்சாட்டினார்.

எழில்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon