மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

எடப்பாடிக்கு தினகரன் வைத்த கோரிக்கை!

எடப்பாடிக்கு தினகரன் வைத்த கோரிக்கை!

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பண இருப்பும் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் வீடு மற்றும் தொழில்களுக்கான மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். இந்த மாதத்தில் மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் பிரசன்னா மின்சாரக் கட்டணம் அதிக அளவில் வந்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜூன் 4) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “மேலும் தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை(Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும்,கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்” என்றும் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் தினகரன்.

எழில்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon