மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

பௌர்ணமி முகூர்த்தம்; அமைச்சர் ரகசிய ஹோமம்!

பௌர்ணமி முகூர்த்தம்; அமைச்சர் ரகசிய ஹோமம்!

கடலூர் திருவந்திபுரம் சாலையில் பாதிரிக்குப்பத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் உள்ள இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது, அந்த இடத்தில் நேற்று, இன்று, நாளை, மூன்று நாள் தொடர்ச்சியாக மூன்றுவிதமான யாகம் செய்துவருகிறார்கள், யாகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு வருகிறார்.

யாகம் செய்வதற்கு வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட 50க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் அருகில் உள்ள ராணி பார்ட்டி ஹாலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். யாகம் நடைபெறும் இடத்திலும், அய்யர்கள் தங்கியிருக்கும் பார்ட்டி ஹாலிலும் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி என்ன யாகம் என்று கடலூர் அதிமுக பிரமுகர்களிடம் கேட்டோம்.

“யாகம் எதுவும் இல்லை. கிரகப் பிரவேசத்துக்காக நடைபெறும் ஹோமம்தான். முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இருந்தபோது மாவட்டந்தோறும் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு சொந்தமாக இடம் வாங்கப்பட்டது. அந்த இடங்கள் பெரும்பாலும் சசிகலா, பூங்குன்றன் போன்றவர்கள் பெயரில் வாங்கப்பட்டது. பூங்குன்றன் பெயரில் மட்டும் பத்து மாவட்டங்களில் அதிமுக அலுவலகம் கட்ட இடம் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் கடலூரில் வாங்கப்பட்ட இடம். அதில்தான் அலுவலகம் கட்டி, நாளை ஜூன் 5ஆம் தேதி, பவுர்ணமி முகூர்த்த நாள் என்பதால் கிரகப் பிரவேசம் நடத்துகிறார் அமைச்சர் சம்பத். இடம் பூங்குன்றன் பெயரில் இருப்பதாலும், ஊரடங்கு அமலில் இருப்பதாலும் தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சத்தமில்லாமல் இந்தப் பணிகளை செய்துவருகிறார் அமைச்சர்” என்கிறார்கள்.

-காசி

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon