மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு!

மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு!

மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று தமிழை செம்மொழியாக அறிவித்தது மத்திய அரசு. செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக முதல்வரே பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் கடந்த 1ஆம் தேதி அறிவித்தார். இதுதொடர்பான ட்விட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோரது பக்கங்களுடன் நடிகர் ரஜினிகாந்தின் பக்கத்தையும் இணைத்திருந்தார்.

இந்த நடவடிக்கையை பாராட்டி ரஜினிகாந்த் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குனரை நியமித்ததற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரமேஷ் பொக்ரியால், “பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம். மனிதவள மேம்பாட்டுத் துறை தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்” என்று நன்றி கூறியுள்ளார்.

எழில்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon