மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வரதராஜுலு நாயுடுவுக்கு நினைவுச் சின்னம்: முதல்வருக்கு ஆர் எம் ஆர் கோரிக்கை!

வரதராஜுலு நாயுடுவுக்கு நினைவுச் சின்னம்: முதல்வருக்கு ஆர் எம் ஆர் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத் தியாகியும், தேர்ந்த பத்திரிகையாளருமான டாக்டர் வரதராஜூலு நாயுடுவின் 134 ஆம் பிறந்தநாள் இன்று (ஜூன்4) கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி அவரது பிறந்த ஊரான ராசிபுரத்தில், முன்னாள் தலைமைச் செயலாளரான ராம் மோகன் ராவின் ஆர்.எம்.ஆர். பாசறை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கொ.நாகராஜன் தலைமையில், டாக்டர் வரதராஜுலுவுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிலையில் பாசறையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ராம மோகன ராவ் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து இன்று (ஜூன் 4) ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

“சேலம் அருகே உள்ள ராசிபுரத்தில் பிறந்த வரதராஜுலு நாயுடு சுதேசி இயக்கத்தால் உந்தப்பட்டு காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார். இந்திய மரபுவழி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற வரதராஜுலு நாயுடு, அந்தத் துறையில் முக்கியமானவராகத் திகழ்ந்ததுடன் தேசிய விடுதலை, பத்திரிகை, எழுத்து, பேச்சு என்று நாட்டுக்காகவே தம்மை அர்ப்பணித்தும் கொண்டார்.

அண்ணாவுக்கு முன்பே தமிழ்நாடு

1916ஆம் ஆண்டு பத்திரிகைப் பயணத்தைத் தொடங்கிய வரதராஜுலு நாயுடு, பிரபஞ்சமித்ரன் என்ற பத்திரிகைக்குப் பொறுப்பேற்றார். அடக்குமுறைகள் தீவிரமாக இருந்த அந்தக் காலத்திலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட கட்டுரைகளை வடித்தார். வரதராஜுலு நாயுடுவின் எழுத்துகளின் வலிமைக்கு உதாரணம்... அவரது கட்டுரைக்காக 18 மாதங்கள் அவருக்குச் சிறை தண்டனை அளித்தது ஆங்கில அரசு. ஆனால் அதை அப்போதைய மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்குச் சென்று வாதாடித் தம் மீது குற்றமில்லை என்று நீதியை நிலைநாட்டி வெளியே வந்தார். அப்போது வரதராஜுலு நாயுடுவுக்காக வாதாடியவர் மூதறிஞர் ராஜாஜி. வரதராஜுலு நாயுடுவின் எழுத்தும், மூதறிஞர் ராஜாஜியின் வாதமும் வென்றதை உணர்ந்த வெள்ளை அரசு பிரபஞ்சமித்ரன் இதழை மூடக் கடுமையாக நெருக்கடி கொடுத்து மூடவைத்தது. ஆனால் 1921ஆம் ஆண்டிலேயே, ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் வரதாராஜுலு நாயுடு. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே, அப்பெயரில் பத்திரிக்கையைத் தொடங்கி அதன்மூலம் பின்னாளில் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கும் இவரே முன்னோடியானார் என்றால் அது மிகையில்லை.

கலனை மாற்றினாலும் காரம் மாறாது என்பதைப்போல வரதராஜுலு நாயுடு, தாம் ஆசிரியராகப் பொறுப்பேற்ற, ‘தமிழ்நாடு’ இதழிலும் கட்டுரைச் சாட்டைகளை வீசினார். அதற்காக ஆங்கில அரசு தேச துரோகக் குற்றம் சாட்டி அவருக்கு மீண்டும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்திய ஆங்கில இதழியலுக்கு நாயுடு அளித்த மிகப்பெரும் கொடைதான் இன்று புகழ்மிக்க பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருக்கும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. 1932ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழைத் தொடங்கிய வரதராஜுலு நாயுடுவால் அதைச் சில மாதங்களே நடத்த முடிந்தது. அந்த நிலையில்தான் ராம்நாத் கோயங்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை வரதராஜுலு நாயுடுவிடமிருந்து வாங்கினார்.

வரிகட்ட மறுத்த வரதராஜூலு

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆங்கில அரசுக்கு வருமான வரி கட்ட மறுத்தார் வரதராஜுலு நாயுடு. ஆனால் ஆங்கில அரசு அதற்காக அவரது காரையும் சேலத்தில் அவருக்குச் சொந்தமாயிருந்த நிலங்களையும் ‘அட்டாச்’ செய்து நடவடிக்கை எடுத்தது” என்று நினைவுகூர்ந்துள்ள ராம மோகன ராவ்,

“1924-1925 காலப்பகுதியில் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோதுதான் சேரன்மாதேவியில் வி.வி.எஸ். ஐயரின் குருகுலத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு பற்றிய சர்ச்சை வெடித்தது. இதில் தேசியத் தலைமை வலிமையாக தலையிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், இதனால் பெரியாரே அதிகம் பலன் பெற்றார். மெல்ல மெல்லக் காங்கிரஸ் கட்சிக்குள் நாயுடுவின் பிடிப்புத் தளர்ந்து, 1939ஆம் ஆண்டில் இந்து மகாசபாவில் சேர்ந்தார். அங்கே பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்த நாயுடு. என்ன நினைத்தாரோ, சுதந்திரத்துக்கு முன்பு 1945ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசையே தேடிவந்துவிட்டார்.

மூதறிஞர் ராஜாஜி, முதலமைச்சராகத் தம் இரண்டாவது பதவிக்காலத்தில் (1952-1954) கல்விக் கொள்கையை ஆரம்பித்தபோது, அது குலக்கல்விக் கொள்கையாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார், 1952 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சேலம் நகரத்தில் போட்டியிட்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வரதராஜுலு நாயுடு. இந்தச் சமூக நீதி அடிப்படையில்தான், மூதறிஞர் ராஜாஜிக்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜரை முதல்வராகவும் முன்மொழிந்தார் வரதராஜுலு நாயுடு.

நினைவுச் சின்னம் இல்லையே?

இந்தியத் தேச விடுதலைக்காகவும், இந்தியச் சமூக விடுதலைக்காகவும் போராடிய வரதராஜுலு நாயுடுவுக்குத் தமிழகத்தில் ஒரு நினைவுச் சின்னம்கூட இல்லை. செல்வந்தராகப் பிறந்து வாழ்ந்து தேசத்துக்காகவே அனைத்தையும் அர்ப்பணித்த வரதராஜுலு நாயுடுவின் மரணத்துக்குப் பின் அவரது மனைவிக்கு வசிக்க வீடுகூட இல்லை என்பதுதான் வேதனையான வரலாறு. தமிழக, இந்திய சரித்திரத்தின் முக்கியப் பக்கங்களில் இடம்பெற்ற தென்னிந்தியத் திலகருக்குத் தமிழகத்தில் நினைவிடமில்லை என்பது அவமானம். தமிழக அரசு இந்த வரலாற்றுக் கறையைத் துடைத்து வரதராஜுலு நாயுடு அவர்களுக்கு நினைவுச்சின்னத்தை ராசிபுரத்தில் எழுப்பவேண்டும்” என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் ஆர்.எம்.ஆர். பாசறை தலைமை ஒருங்கிணைப்பாளர் ராம மோகன ராவ்.

-வேந்தன்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon