மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமைச்சர்கள் அணி!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமைச்சர்கள் அணி!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“முதல்வர் எடப்பாடிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் இயல்பானதாக இல்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். எடப்பாடி 2017 பிப்ரவரி 17 ஆம் தேதி ஆட்சியைப் பிடித்தது முதல் தனது முதல்வர் நாற்காலியை நிலை நிறுத்துவது வரை அமைச்சர்களிடம் படாத பாடுபட்டார். முதல்வர் எடப்பாடியால் எந்த ஒரு மாவட்டத்துக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்க முடியாத நிலையே முதல் இரு வருடங்களாக நிலவியது. காரணம் ஒவ்வொரு மாவட்ட அமைச்சரும் எடப்பாடியை தங்கள் மாவட்டத்துக்குள் தடபுடலாக வரவேற்க விருப்பப்படவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு அரசு விழாவை மையமாக வைத்துதான் மாவட்டங்களுக்குள் செல்ல ஆரம்பித்தார். அப்போதெல்லாம் ஒரு எம்.எல்.ஏ.வைக் கண்டால் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசிவந்தார் முதல்வர்.

ஆனால் மெல்ல மெல்ல ஆட்சி நிலை நிறுத்தப்பட ஆரம்பித்ததும் எடப்பாடியின் அமைச்சர்கள் மீதான அணுகுமுறையும் மாற ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி முழு அதிகாரம் மிக்க முதல்வராக ஆரம்பித்தார் என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலான துறைகளில் அதிக மதிப்புள்ள முடிவுகள் எடுக்கப்பட்டால், முதல்வர் அலுவலகத்தைக் கேட்காமல் ஒப்புதல் தரப்படக் கூடாது என்று துறைச் செயலாளர்களுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதுமுதற்கொண்டு பல அமைச்சர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் தேனி நிகழ்ச்சிகளுக்குப் புறப்படுவதற்கு முன்பாக அதிமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும் சட்டம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் இரவு 11 மணிக்கு மேல் முதல்வர் எடப்பாடியின் வீட்டுக்கு சென்று முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில் அமைச்சர்களின் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பாரபட்சமாக நடந்துகொள்கிறீர்கள் என்றும், தன்னுடைய சுரங்கத்துறையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உங்கள் ஆட்களின் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன என்றும் அதிகாரிகள் தான் சொன்னதைக் கேட்பதில்லை என்றும் தன மன வருத்தங்களை தனது இயல்புக்கு ஏற்றார்போல் வெளிப்படுத்தினார். மேலும் வட மாவட்டங்களில் பாமகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏன் தலைமையால் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சண்முகம். அமைச்சர் சண்முகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பை உணர்ந்த முதல்வரும் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.

சி.வி. சண்முகம் நேரடியாக முதல்வர் வீட்டுக்கே போய் கேட்டுவிட்டு வந்துவிட்டார், மற்ற அமைச்சர்கள் இன்னும் நேரடியாகப் போய் கேட்கவில்லை என்பதுதான் நிலைமை. முதல்வருக்கு நெருக்கமான சுமார் ஆறு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தன் துறைக்குள் எந்த வித ‘பெரிய’ முடிவுகளையும் மேற்கொள்ள முடியவில்லை என்பதே அமைச்சர்களின் குமுறல். தொழில் முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்ட குழுவில் தொழில் துறை அமைச்சர் இடம்பெறவில்லை, ஊரடங்குக்குப் பிறகான நிதிநிலைமை மேம்படுத்துதல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சர் இடம்பெறவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலினும் அண்மையில் அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையை பல அமைச்சர்கள் ரசித்திருக்கிறார்கள். இந்தப் புறக்கணிப்பே பல அமைச்சர்களை எடப்பாடிக்கு எதிராக ஓரணியில் திரட்டி வைத்திருக்கிறது.

அதேநேரம் கோட்டை வட்டாரத்தில் இன்னொரு தகவலும் உலா வருகிறது. அமைச்சர்களால் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த முதல்வர் இப்போது அமைச்சர்களைக் கட்டுப்படுத்துகிறார். இது நிர்வாக ரீதியானதுதான் இதில் ஒன்றும் தவறு இல்லையே என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

நிர்வாக ரீதியிலான இந்த விவகாரம் தேர்தல் நெருங்க நெருங்க கட்சி ரீதியாகவும் வெடிக்கத் தயாராகியிருக்கிறது. ஆட்சி முடியும் தருவாயில் இது முழுக்க கட்சி விவகாரமாக வெடிக்கும். அமைச்சர்கள் பலர் தங்களுக்குள் இதுபற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon