மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

கொரோனா பரவலுக்கு அரசுதான் காரணம்: ஸ்டாலின்

கொரோனா பரவலுக்கு அரசுதான் காரணம்: ஸ்டாலின்

கொரோனா பரவலுக்கு தமிழக அரசுதான் மறைமுக காரணமாக இருந்தது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராயபுரம் மண்டலத்தில் 3224 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2093 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2029 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2014 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1798 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வரும் நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று (ஜூன் 5) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட, சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை.கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட இராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப் போல, இலட்சத்தைத் தாண்டிச் செல்லுமோ என்றே நினைக்கத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள ஸ்டாலின், “பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் பாதி அளவைத்தான் அரசு சொல்கிறது என்று ஊடகங்கள் இப்போது எழுதத் தொடங்கியுள்ளன. கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைத் தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் 144 போட்டுள்ளதாகவும் சொல்லப்படும் சென்னையில் வாகனப் போக்குவரத்து என்பது, நெரிசல் மிகுந்ததாக உள்ளது என்றால் இதுதான் ஊரடங்கும், 144 தடையும் அமலில் இருக்கும் இலட்சணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“கோயம்பேடு காய்கறி அங்காடியைத் திறந்துவிட்டும், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டும் கொரோனா பரவலுக்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக அரசு, இப்போது சென்னையைத் திறந்து விட்டு, அடுத்த கொரோனா பாய்ச்சலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்” என்று கூறியவர்,

இராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, 'கொரோனா இல்லாத சென்னை'யாகக் காட்டுவதற்கு அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடுவீடாகச் செய்ய வேண்டும். இப்பகுதியைச் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும். சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும்” என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon