மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

ஜெ.அன்பழகன் உடல்நிலை: முதல்வர் நலம்விசாரிப்பு!

ஜெ.அன்பழகன் உடல்நிலை: முதல்வர் நலம்விசாரிப்பு!

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ. அன்பழகன் ஜூன் 2 ஆம் தேதி சென்னையிலுள்ள டாக்டர் ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தது.

இதனைத் தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர். மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இப்போது ஜெ. அன்பழகனுக்கு 80% ஆக்சிஜன் வென்டிலேட்டர் மூலமாகவே அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் கடந்த 24 மணி நேரமாக எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ரேலா மருத்துவமனை மருத்துவர் ஒருவர், “அன்பழகனுக்கு தொடர்ந்து வெண்டிலேட்டரில் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. எனினும், அவரது உடல்நிலை சீராகவே உள்ளது” என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ளார். ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரேலா மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்று கேட்டறிந்தவர், அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரணநலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ரேலா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று, ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon