மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேரன்களும் கைது!

திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேரன்களும் கைது!

கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் அதிமுகவினரின் புகார்களை அடுத்து தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதை எதிர்த்து இன்று (ஜூன் 5) அம்மாவட்டம் முழுதும் திமுகவினரின் போராட்டம் நடந்தது.

திமுகவின் கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், விவசாய அணி அமைப்பாளர் ராம மூர்த்தி, கிணத்துக் கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. துரை, மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். ஏற்கனவே இளைஞரணி, வர்த்தகர் அணி, பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் என சிலர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். மேலும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இன்று (ஜூன் 5) திமுகவினர் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் இதற்குக் காரணம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான் என்று குற்றம் சாட்டியும் மாவட்டம் முழுதும் திமுகவினர் சமூக இடைவெளியோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் முழுதும் வெவ்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். தென்றல் செல்வராஜின் பேரன்களான மாறன், பொய்யாமொழி ஆகியோர், ‘என் தாத்தாவை விடுதலை செய்’ என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தென்றல் செல்வராஜின் குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுகள் தொடர்ந்தால் நானே போராட்டக் களத்துக்கு வருவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்த நிலையில், இன்று நடந்த போராட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளரின் பேரன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-வேந்தன்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon