மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை

அன்பழகன் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரேலா தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. அன்பழகன் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர் ரேலாவிடம் இன்று (ஜூன் 5) தொலைபேசியில் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கே நேரில் வந்து மருத்துவர்கள் குழுவிடம் அன்பழகனின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “முதல்வர் அறிவுறுத்தலின் பேரின் மருத்துவமனைக்கு வருகை தந்தோம். அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவருக்கு மேலும் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கலாம், என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து ரேலா தலைமையிலான மருத்துவர்கள் குழுவுடன் 20 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினோம். அவரது மகனிடமும் நலம் விசாரித்தேன். அவர் முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அவர் பூரண நலம் பெற வேண்டும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மருத்துவமனை இயக்குனர் ரேலா, வதந்திகள் குறித்து விளக்கமளித்தார்.

“3 நாட்களுக்கு முன்பு ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரும்போதே மூச்சுத்திணறலோடு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டதையடுத்து, 24 மணி நேரம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. பின்னர் மூச்சுத்திணறல் ஆக்சிஜனால் கட்டுப்படுத்த முடியாததால் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றினோம்.

நேற்று அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 80 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக குறைந்துள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் அதற்கான மருத்துகளை ஜெ.அன்பழகன் எடுத்துவருகிறார் என்பதால் பயந்தோம். தற்போதைய முன்னேற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

கொரோனா பற்றிய ஆய்வுகள் முடியாத நிலையில் ஒரு வாரம் கழித்து நிலைமை மீண்டும் கூட மோசமடையலாம் என்றும் எச்சரித்த ரேலா, “அது இல்லாமல் அவர் உடல் நிலை தேறவேண்டும். அதற்கான சிகிச்சையை அளித்து வருகிறோம்.அரசு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறது. . தயவுசெய்து வதந்திகளை நம்பாதீர்கள். வாட்ஸ் அப்பில் வருவதை நம்பாதீர்கள்” என்றும் வேண்டுகோள் வைத்தார்.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon