மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

சீனக் கொடியை எரிக்க முயற்சி: அர்ஜுன் சம்பத் கைது!

சீனக் கொடியை எரிக்க முயற்சி: அர்ஜுன் சம்பத் கைது!

சீனக் கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் பல இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீனாவின் கொடியை எரித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று (ஜூன் 5) கண்டனப் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் அருகே சீனாவைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சீனப் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “எல்லையில் நமது ராணுவ வீரர்களை சீன ராணுவ வீரர்கள் அவமதிக்கிறார்கள். லடாக் பகுதியை ஆக்கிரமிக்கிறார்கள். ஆகவே, இந்திய பொருளாதாரத்தை அழிக்கும், உள்ளூர் வணிகர்களின் நலனைக் கெடுக்கும் சீன வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். எந்த சீனப் பொருளாக இருந்தாலும் போலியாகவே இருக்கிறது. அவற்றை வாங்குவதை புறக்கணிக்க வேண்டும். சீனாவின் மீது போர்த்தொடுக்கும் வகையில் சீனாவின் ராஜ்ஜிய உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பின்னர், சீன தேசிய கொடியை எரிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோலவே, சீன பொருட்களில் இறக்குமதிக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை டவுன் சந்தியில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் சிலர் சீன அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சீனக் கொடியினை எரிக்க முயன்ற 36 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுபோலவே தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon