மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

5 அமைச்சர்களிடம் சென்னை: இதிலும் அரசியலா?

 5  அமைச்சர்களிடம் சென்னை: இதிலும் அரசியலா?

சென்னையில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து, தமிழகம் முழுதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த ஐந்தாறு நாட்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிக் கொண்டே இருக்கிறது.

சில பெரிய மாநிலங்களின் பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கூறிய நிலையில், இன்று (ஜூன் 5) சென்னை மண்டலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 5 அமைச்சர்களை நியமித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.

ஏற்கனவே சென்னைக்கு வருவாய் பேரிடர் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சை சிறப்பு அதிகாரியாக நியமித்த தமிழக அரசு, அவருக்கு உதவியாக ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் நியமித்தது. இந்நிலையில் சென்னையின் அபாயகரமான கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு கொரோனா தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அமைச்சர் ஜெயக்குமார் சென்னையின் 3,.4,5 மண்டலங்களை கவனித்துக் கொள்வார். அமைச்சர் கே.பி. அன்பழகன் 13,14, 15 மண்டலங்களுக்கும், அமைச்சர் காமராஜ் 8,9.10 மண்டலங்களுக்கும், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 1,2,6 மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 7,11, 12 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக இருப்பார் என்று இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முற்றிலும் அதிகாரிகள் மூலமாகவே செய்து வந்தார். அதிகாரிகளையே முழுதாக நம்பினார். அப்போதே, ‘மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துங்கள். அப்போதுதான் இக்கட்டான சந்தர்ப்பங்களில் மக்களை கையாள முடியும்’ என்று முதல்வருக்கு பல ஆலோசனைகள் தரப்பட்டன. ஆனால் முதல்வரோ, கொரோனா என்பது மருத்துவம் மற்றும் நிர்வாகப் பிரச்சினை என்று கருதினார். ஒரு கட்டத்தில் சென்னையின் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில்தான்... மக்களைக் கையாளும் பொறுப்புக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவை என்பதை உணர்ந்து இப்போது அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார்.

இந்த அமைச்சர்கள் குழு நியமனத்திலும் அரசியல் இருக்கிறது. சென்னை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகிய மூன்று அமைச்சர்களில் ஜெயக்குமார் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை உதயகுமார், கரூர் விஜயபாஸ்கர், தர்மபுரி அன்பழகன் ஆகியோரோடு லோக்கல் அமைச்சர்கள் மூவரையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நியமித்திருக்கலாமே... ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்விகளும் இந்த அறிவிப்பைப் பார்த்து எழுந்துள்ளன.

இதில் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பெஞ்சமின் ஏற்கனவே சென்னை துணை மேயராக இருந்தவர். மற்ற அமைச்சர்களுக்கு சென்னையைப் பற்றி இருக்கும் தெளிவை விட இவர்களுக்கு அதிகம் என்பதால் இவர்களையும் பயன்படுத்தியிருக்கலாமே?” என்பதுதான் அதிமுகவினர் மத்தியில் கேள்வியாய் நிற்கிறது.

இப்படியெல்லாம் பேச்சுகள் இருந்தாலும் களத்தில் அமைச்சர்களை இறக்கிவிட்டிருப்பது வரவேற்கத் தக்கது.

-வேந்தன்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon