மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

எட்டுவழிச் சாலை: மத்திய அரசு புதிய மனு!

எட்டுவழிச் சாலை: மத்திய அரசு புதிய மனு!

எட்டுவழிச் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை முதல் சேலம் வரை 277 கிமீ தொலைவுக்கு எட்டுவழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணை முடிவில், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எட்டுவழிச் சாலை திட்டச் செயல் இயக்குநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது. எனினும், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக எட்டுவழிச் சாலை திட்ட இயக்குநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று நேற்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “எட்டுவழிச் சாலைக்குத் தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு ஆறு மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் திட்டத்தின் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆகவே, இதை அவசர வழக்காக கருதி மீண்டும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதைத் தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon