கொரோனா நபருடன் ஒருமணி நேரம்: பதற்றத்தில் துரைமுருகன்

politics

திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கொரோனா ஊரடங்கில் தன்னை பலரும் வந்து சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே ஏலகிரி மலையில் நிலாவூரில் தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய பங்களாவில் ஓய்வெடுத்து வருகிறார். 81 வயதாகும் துரைமுருகன் இதய சிகிச்சை செய்துகொண்டிருப்பவர். அதனால்தான் கொரோனாவின் தொடக்க நாட்களில் இருந்தே மிகவும் கவனமுடன் இருந்து வருகிறார்.

மார்ச் மாதமே சட்டமன்றத்தில் பேசிய துரைமுருகன், “கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இருந்தாலும் பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நேரத்தில் சட்டசபை நடத்த வேண்டுமா. எனவே, சட்டசபையை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அப்போது பதிலளித்த முதல்வர், “அன்ணன் துரைமுருகன் வயதாகிவிட்டதால் அச்சப்படுகிறார். நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்று கூறினார். இப்படி ஆரம்பகட்டத்தில் இருந்தே தன்னை மையமாக வைத்து, தமிழகத்தையும் மையமாக வைத்து கொரோனா முன்னெச்சரிக்கைகளை விடுத்து வந்தார் துரைமுருகன்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் சில நாட்கள் சென்னையில் இருந்தவர், பின்னர் தனது சொந்த ஊரான காட்பாடிக்குப் புறப்பட்டுவிட்டார். அங்கே தினமும் தன்னை சந்திக்க கட்சியினர் வருகிறார்கள் என்பதால் மருத்துவரின் அறிவுரைக்கேற்ப, ஏலகிரி மலைமேல் நிலாவூரில் இருக்கும் தனது ஓய்வு பங்களாவுக்குச் சென்றுவிட்டார் துரைமுருகன். அங்கே அவரது மனைவி, உதவியாளர், சமையல்காரர் ஆகியோருடன் மட்டுமே தங்கியிருக்கிறார்.

இந்நிலையில்தான், ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார் துரைமுருகன். உடனடியாக வசந்தம் கார்த்திகேயனுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

இதுபற்றி வேலூர் திமுக வட்டாரத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமான சிலரோடு பேசியபோது அவர்கள் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்துக்காக வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட பத்து கோடிக்கும் மேற்பட்ட பணம் துரைமுருகன் நண்பர்களிடமிருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் துரைமுருகன் தன் மகனின் தேர்தல் செலவுக்கு கஷ்டப்பட்டார். ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவழித்திருந்த நிலையில் மீண்டும் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதால் உண்மையிலேயே பணத்துக்குத் திண்டாடினார். அப்போது திமுகவில் பலரும் துரைமுருகனுக்கு உதவத் தயங்கிய நிலையில், தகவல் கேள்விப்பட்டு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சில நிர்வாகிகளோடு சென்று துரைமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு பெருந்தொகையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகே அதை எண்ணிப் பார்த்து ஆச்சரியப்பட்ட துரைமுருகன் அப்போதே வசந்தத்துக்கு போன் செய்து, ‘தக்க சமயத்துல பெரிய உதவி செஞ்சே தம்பி. நீ கொடுத்த நேரம், அதன் பிறகுதான் பலரும் உதவி பண்ணாங்க’ என்று நன்றி சொல்லியிருக்கிறார். இதை அப்போதே திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் சொல்லி சிலாகித்திருக்கிறார் துரைமுருகன். சட்டமன்றத்தில் எப்போது பார்த்தாலும், ‘என்ன வசந்தம்… நீ பெரிய ஆளுய்யா…’ என்று மனம் திறந்து பாராட்டுவார்.

அப்படிப்பட்ட வசந்தம் கார்த்திகேயன் சில வாரங்களுக்கு முன் துரைமுருகனை ஏலகிரி பங்களாவில் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் அப்போது மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் துரைமுருகன். இந்த நிலையில்தான் வசந்தம் கார்த்திகேயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும் பதற்றமாகிவிட்டார் துரைமுருகன். வசந்தம் கார்த்திகேயன் ஏலகிரி சென்று துரைமுருகனை சந்தித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்திருக்குமோ என்பதுதான் துரைமுருகனின் பதற்றத்துக்குக் காரணம். எனவே இந்தத் தகவலுக்குப் பின் உடனே துரைமுருகனுக்கும் டெஸ்ட் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பிறர்க்கு உதவி செய்துதான் வசந்தம் கார்த்திகேயனுக்கு பழக்கம். அவரால் யாருக்கும் தொந்தரவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பயப்படாமல் இருங்கள் என்று துரைமுருகனைச் சுற்றியுள்ளவர்கள் அவருக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள் வேலூரில் இருக்கும் துரைமுருகன் வட்டாரத்தினர்.

**-வேந்தன் **�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *