மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்!

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்!

கொரோனா அதிதீவிரமடைந்துள்ள இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஜூன் 24) டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, சிகிச்சை அளிக்கும் விதங்கள் உள்ளிட்டவை குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள், உட்பிரிவு சிக்கலை ஆய்வு செய்ய, அரசியலமைப்பின் 340ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை ஜனவரி 31, 2021 வரை ஆறு மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு 2 சதவிகித வட்டி தள்ளுபடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தகுதியான கடன்தாரர்களுக்கு இந்த சலுகை கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் ஓராண்டுக்குப் பொருந்தும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “அரசு வங்கிகள், 1,482 கூட்டுறவு வங்கிகள், 58 மாநிலக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவை இனி நேரடியாக ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும். ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்தக் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். இதுதொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார். இந்த வங்கிகளில் உள்ள 8.6 கோடி நபர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள 4.64 லட்சம் கோடி ரூபாய் இனி பத்திரமாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்தார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறுகையில், “விண்வெளித் துறை நடவடிக்கைகள் அனைத்திலும், தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விண்வெளித் துறையில் இந்தியாவின் ஆற்றலைத் திறக்கும்.

இந்திய விண்வெளி கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கான வசதிகளை, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் மையம் (IN-SPACE) வழங்கும். இது விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வழிகாட்டும்” என்று அவர் கூறினார்.

எழில்

வியாழன், 25 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon