மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? இன்று முடிவு!

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? இன்று முடிவு!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவக் குழுவோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 82,275 ஆக அதிகரித்தது. தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ஊரடங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு,

"மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு ஊரடங்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படும்"

என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 29) காலை 11 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆறு முறை நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு கட்டாயம் என்ற கருத்தையே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த 15ஆம் தேதி நடந்த ஆலோசனைக்குப் பின் பேட்டியளித்த நிபுணர்கள், தமிழகத்தில் கொரோனா உச்சக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களிலும் முழு ஊரடங்கும், மற்ற மாவட்டங்களிலும் ஊரடங்கு தொடரவும் மருத்துவக் குழு பரிந்துரைக்கலாம் அல்லது தமிழகம் முழுவதுமே முழு ஊரடங்கைப் பரிந்துரைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon