நியூஸ் 18: மாரிதாஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்! பின்னணியில் யார்?

politics

தமிழ் தொலைக்காட்சி சேனலான நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில், யுட்யூப் வீடியோ பதிவாளர் மாரிதாஸ் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிர்வாகி பெயரைச் சொல்லி போலி மின்னஞ்சலை சமூக தளங்களில் உலவ விட்டுள்ளதாகவும், மத மோதல் ஏற்படும் வகையில் சமூக தளங்களில் பரப்புவதாகவும் மாரிதாஸ் மீதான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் தொடர்ந்து இந்து எதிர்ப்புப் பிரசாரம் நடப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த சேனலின் ஆசிரியர் குணசேகரன் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றனின் மருமகன் என்பதால்தான் என்றும் அதனால் அவர்கள் திக, திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக மாரிதாஸ் வீடியோக்களை பேசி வெளியிட்டு வந்தார். இதுகுறித்து ஜூலை 5 ஆம் தேதி அந்த சேனலின் தலைமைக்கு தான் புகார் அனுப்பியிருப்பதாகவும் மாரிதாஸ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி, ‘முதல் கட்ட வெற்றி; என்று தலைப்பிட்டு… ‘நியூஸ் 18 சேனலின் தலைமை ஆசிரியர் வினய் சரவாகி என் புகாரை ஏற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இப்போது நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?” என்று தனது வழக்கம்போல வீடியோ வெளியிட்டார் மாரிதாஸ்.

இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்தில் அந்த மின்னஞ்சலை தனக்கும் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரனுக்கும் அனுப்பியதாக மாரிதாஸ் குறிப்பிட்ட, வினய் சர்வாகி ஒரு ட்விட் பதிவை வெளியிட்டார். அதில், “ ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் எனது பெயரில் ஒரு போர்ஜரி மெயில் உலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எனது அலுவலகம் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் மாரிதாஸ் குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் போலியானது என்று வினய் சர்வாகியே போட்டுடைத்தார்.

இந்தப் பின்னணியில், “மாரிதாஸ் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதோடு மத ரீதியான வெறுப்புப் பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். மாரிதாஸ் குறிப்பிட்டது போல அவருக்கு எங்கள் நிறுவனம் சார்பில் எந்த மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை, எனவே போலியான தகவல்களைப் பரப்பி வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் புகார் அளித்தது நியூஸ் 18 தமிழ்நாடு. இந்தப் புகாரை மத்தியக் குற்றப்பிரிவுக்கு அனுப்பி இதன் மீது விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் மாரிதாஸை இயக்குவது யார் என்பது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் பத்திரிகையாளர்கள் சிலர், விசாரணைத் தேடலில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே மாரிதாஸ் நடிகர் ரஜினியை சென்று சந்தித்தவர் என்பதால் ஒருவேளை இதன் பின்னால் ரஜினி இருக்கக் கூடுமோ என்று எண்ணி ரஜினி வட்டாரத்தில் பேசியிருக்கிறார்கள். அப்போது, “நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் ரஜினி சார் பற்றி நிறைய செய்திகள் வந்திருக்கின்றன. விவாதங்கள் நடந்திருக்கின்றன. அவரது சினிமா சாதனைகள் பற்றிய தொகுப்புகளும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. இந்த பின்னணியில் ரஜினி சார் இப்படியெல்லாம் செய்ய மாட்டார். இன்னும் சொல்லப் போனால் எதிர்த்தால் ரஜினி நேரடியாக எதிர்ப்பார், இதுபோல ஆள் வைத்து எல்லாம் செய்யும் வழக்கம் அவருக்கு இல்லை” என்று தெளிவுபடுத்திவிட்டனர். அப்படியென்றால் மாரிதாஸுக்கு தார்மீக ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது என்று விசாரணை நீண்டதில், “பிரபலமான ஒரு வலதுசாரி பத்திரிகையாளரும், தேசியக் கட்சியின் தேசியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரும்தான் மாரிதாஸுக்கு பின்னால் இருக்கிறார்கள்” என்று ஒரு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அப்பத்திரிகையாளர்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *