^பிரேமலதா-சபரீசன்: திடீர் சந்திப்பு

politics

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா ஊரடங்கையும் தாண்டி, அரசியல் கட்சிகள் தத்தமது வட்டாரத்தில் திரைமறைவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானதொரு சந்திப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்திருக்கிறது.

தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளையும் திமுகவுக்காக திரைமறைவு அரசியல் நகர்வுகளை மேற்கொள்பவருமான சபரீசனும் சில நாட்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் திமுக துரைமுருகனுடன் பேச்சு, இன்னொரு பக்கம் பாஜக, அதிமுகவினருடன் பேச்சு என குழம்பிய தேமுதிக கடைசியில் வேறு வழியில்லாமல் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. கடைசியாக வந்ததால் அதிமுகவும் தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. “பாமக வட மாவட்டங்களில் மட்டும்தான் இருக்கிறது. தேமுதிகவோ வட மாவட்டம், மேற்கு மாவட்டம், தென் மாவட்டம் என தமிழகம் தழுவிய அளவில் 8% வாக்குகளை ஏற்கனவே நிரூபித்திருக்கிறது. ஆனால் பாமகவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அதிமுகவில் எங்களுக்குத் தரவில்லை” என்று தேமுதிகவினர் வெளிப்படையாகவே குரல் கொடுத்தனர். ஆனால், பாஜகவின் அழுத்தத்தால் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே இருந்தது தேமுதிக.

ஆனால் சமீப காலமாக மீண்டும் தேமுதிகவுக்குள் அதிமுகவுக்கு எதிரான ஒரு மனநிலை நிர்வாகிகளிடத்தில் உருவாகியிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டுதான் இளைஞரணிச் செயலாளர் சுதீஷ், ‘இனியும் அதிமுகவோடு சேர்ந்து அவமானப்பட வேண்டாம். திமுக பக்கம் இப்போது மக்கள் மனநிலை சாயத் தொடங்கியுள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு முயற்சிக்கலாம்’ என்று தன் அக்காவும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் கூறியது பற்றி மின்னம்பலத்தில், [‘திமுகவை நோக்கி தேமுதிக?](https://www.minnambalam.com/politics/2020/08/02/35/dmdk-dmk-starts-talks-primary) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இதேநேரம் திமுகவுக்கும் தேமுதிகவின் பயன்பாடு வரும் சட்டமன்றத் தேர்தலில் தேவை என்ற கருத்துகள் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஒலித்து வருகின்றன. “திமுகவுக்கு மேற்கு மாவட்டங்களில் வழக்கமாகவே ஒரு தொய்வு இருந்துகொண்டிருக்கிறது. அதேநேரம் அதிமுக கொங்கு பெல்ட்டில் தொடர்ந்து பலமாகவே இருக்கிறது. இந்த நிலையில் கொங்கு பகுதிகளில் தேமுதிக தனது சீரான பலத்தை தொடர்ந்து வைத்திருக்கிறது. கவுண்டர்கள், அருந்ததியர்கள் என இரு தரப்பிலும் தேமுதிகவுக்கென குறிப்பிடத் தக்க வாக்கு வங்கி இருக்கிறது. இதை திமுக தனது கொங்கு பற்றாக்குறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று மேற்கு மாவட்ட திமுகவினர் தலைமைக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் கொங்கு பகுதியில் திமுகவுக்கு 3% வாக்கு வங்கி சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சர்வேயிலும் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் மின்னம்பலத்தில் [கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்](https://www.minnambalam.com/politics/2020/07/30/39/kongu-survey-stalin-shock-dmk-admk) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்படி தேமுதிகவுக்கும் தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்த வேண்டியுள்ளது, திமுகவுக்கும் தனது கொங்கு பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியிருக்கிறது. திமுக-தேமுதிக கூட்டணி அமைந்தால் அது இரு தரப்பினருமே பயன்பெறும் கூட்டணியாக இருக்கும் என்ற தொடர்ச்சியான கருத்து வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனும் இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் தேமுதிக கசப்பில் இருக்கும் இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *