திமுக, அதிமுகவுக்கு அடுத்து… வியூகம் வகுக்கும் பாஜக!

politics

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்…

“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாஜக என மூன்று அமைப்பினரும் பொதுமக்களிடம் சென்று அவர்களுக்கு தேவையானதைப் பூர்த்திசெய்து கொடுத்து அரசியல் பயிற்சி கொடுக்கிறோம். உதாரணமாகக் கடந்த ஆண்டு புதுச்சேரியில் வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 99 சதவிகிதம் பேர் தொடர்ந்து பாஜகவினருடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

பாஜகவில் சேருபவர்களுக்கு பொருளாதார உதவிகள், வெளித் தொடர்புகள், மும்பை, டெல்லி என வெளி மாநிலங்களுக்கு அழைத்துப்போவது, அதிகாரத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி உதவிசெய்வது போன்ற நடவடிக்கைகளால் பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

பாஜக தலைமையின் நோக்கம் தமிழகத்தின் வாக்கு வங்கியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே. அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கட்சியாக பாஜகதான் இருக்கவேண்டும் என்று அதற்கான திட்டமிடுதல்களை முன்னெடுக்கின்றனர். தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகள் வாங்கத் திட்டமிட்டு அதற்கான வீயூகங்களை வகுத்து வருகிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒருவரிடம் பேசினோம்… “டெல்லி, மும்பை என எங்கு சென்றாலும் பாஜக என்றால் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். காவல் துறையிடம் இருந்தும் நல்ல மரியாதை கிடைக்கிறது. நாங்கள் கொடுக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். பாஜக தலைவர்கள், அமைச்சர்களை எளிமையாக சந்திக்க முடிகிறது. நான் வைக்கும் கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது” என்றார்.

இதுபோலவே பாஜகவுக்கு எதிராகவோ, கடவுளுக்கு எதிராகவே யாராவது பேசினால், சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அவரது விவரங்களைத் தெரிந்துகொண்டு அப்பகுதி நிர்வாகிகள் மூலமாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் அளிக்கிறார்கள். அத்துடன் பாஜகவில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு ஒரு பிரச்சினை என்று காவல் நிலையம் சென்றால் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக குரல் கொடுக்கிறார்கள். அதனை பார்க்கும் கிராமத்து இளைஞர்கள் தங்களது பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தமக்குப் பின்னால் பெரிய கூட்டம் இருப்பதாகவும் நினைத்து மற்ற இளைஞர்களையும் பாஜகவுக்கு வளைக்கிறார்கள் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

திருமணம், காதணி விழா, இறப்பு, கரும காரியங்கள் என்றால் ஊரிலுள்ள பாஜகவினர் மூலம் போஸ்டர், பேனர்கள் வைக்கச் சொல்கிறது பாஜக தலைமை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓலைப்பட்டிக் கிராமத்தில் திருவேங்கடம் என்பவர் இறந்துவிட்டார்.

அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக சார்பில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலாவவிடப்பட்டன. . ஆனால், அவரும் அவரது குடும்பத்தினரும் பாரம்பரியமாக திமுககாரர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதுபோன்ற விளம்பரங்களை ஒரு உத்தியாக கையாண்டு ஊர் ஊராகக் கட்சியை வளர்க்க முயற்சி செய்கிறார்கள் பாஜகவினர்.

**வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *