�தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே… ஹெச்.ராஜா சொல்வது சீரோ சதவிகிதம் கூட உண்மையில்லை!

politics

-மொழிபெயர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் பேசியதாகவும், ‘ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று கனிமொழி சொன்னதற்கு, ‘நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாதா?’ என்று கேட்டதாகவும் கனிமொழி தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டதோடு, “ எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் கொள்கை அல்ல” என்று கூறியது.

ஆனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச், ராஜா இது தொடர்பாக தனது சமூக தளத்தில், “கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் **இந்த சம்பவம் தொடர்பாக நாம் சில மூத்த அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து விசாரித்ததில் பொய் சொன்னது கனிமொழி அல்ல ஹெச்.ராஜா என்பது தெரியவந்தது. மேலும், 1989 ஆம் ஆண்டு தேவிலாலின் உரையை மொழிபெயர்த்தது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தேவசகாயம் ஐ.ஏ.எஸ்.சிடம் போனில் உரையாடினோம்.**

1989 ஆம் ஆண்டு தேவிலாலின் தமிழக வருகை பற்றியும் அப்போது அவரது உரையை மொழிபெயர்த்தது பற்றியும் பேசினோம்.

“தேவிலால் ஹிந்தி பேச மாட்டாரு. உருது கலந்துதான் பேசுவாரு. கனிமொழி அப்போது பொலிடிகல் லீடரா என்ன? அவருக்கு அப்போது இருபது வயது இருக்கலாம். ராஜா முட்டாள்தனமாக ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

**தேவிலால் 1989 டிசம்பர் முதல் வாரத்துல துணை பிரதமர் ஆனார். நான் ஹரியானாவில் ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றியபோது அவர் முதல்வராக இருந்தார். துணை பிரதமர் ஆனதும் இரு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தார். ஒன்று, விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்தது. மிகப்பெரிய நிகழ்ச்சியாக விவசாயிகள் சங்கம் அதை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஹரியானாவில் நான் தேவிலாலிடம் பணியாற்றிய அறிமுகத்தாலும் எனக்கும் உருது தெரியும் என்பதாலும் என்னை மொழிபெயர்க்குமாறு தேவிலாலே கேட்டுக் கொண்டார். அந்த உரையை நான் மொழிபெயர்த்தேன்.

அப்புறம் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலையில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஒதுக்கீட்டை தமிழகம் கேட்டது. அதற்காக முதல்வர் கருணாநிதி சென்னை வந்த துணை பிரதமர் தேவிலாலை சந்தித்தார். அப்போது தேவிலால் என்னிடம், ‘என் கூட நீங்களும் வாங்க’ என்று அழைத்துச் சென்றார். கருணாநிதியை பார்த்த பிறகு ஒரு மீடியா கான்ஃபிரன்ஸ்தான் வச்சாருனு நினைக்கிறேன். அதையும் நான் தான் மொழிபெயர்த்தேன்.

**இப்படி இருக்க ஹெச்.ராஜா சொல்லியிருப்பதில் சீரோ சதவிகிதம் கூட உண்மையில்லை. அவங்க என்னைக்காவது ஒரு உண்மை சொல்லியிருக்காங்களா? நீங்கதான் (ஊடகங்கள்) அவங்களுக்கெல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறீங்க**” என்று நம்மிடம் கூறினார் தேவசகாயம் ஐ.ஏ.எஸ்.

**-ஆரா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *