ஸ்டாலினுக்கு தாசானுதாசனாக இருப்பேன்: துரைமுருகன் பணிந்த பின்னணி!

politics

திமுகவின் பொதுக்குழு முடிந்து ஓரிரு நாட்கள் ஆனபோதும் அங்கே புதிய நிர்வாகிகள் பேசிய பேச்சு திமுகவினராலும், அரசியல் ஆர்வலர்களாலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழுவில், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட **துரைமுருகன் பேச்சில் ஒருபக்கம் சுயமரியாதை உணர்வு பொங்கி வழிந்தாலும், இன்னொரு பக்கம், ‘நானும் என் குடும்பமும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தாசானுதாசர் அதாவது அடிமையாக இருப்போம்’ என்று கூறி இயல்புக்கு மாறாக மிக மிக பணிந்து பேசினார்.**

“இந்தப் பொறுப்புக்கு என்னை தகுதியுடையவன் என்றும் உழைப்பேன் என்றும் என் மீது நம்பிக்கை வைத்த நம் தலைவர் அவர்களுக்கு என் தலைசாய்த்து நன்றி கூறுகிறேன். நான் என்ன சாதி, எந்த ஊர் என்று எந்த தகவலும் கேட்காமல் என்னை வளர்த்தவர் தலைவர் கலைஞர். என் வாழ்நாள் இறுதிவரை அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். அவர் மாண்டுவிட்டார். நான் சாகிற வரை சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. அப்படி பழகியிருக்கிறோம் நாங்கள். தளபதியை சின்ன வயதில் இருந்து நான் அறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள்.

என்னைப் படிக்க வைத்தவர் எம்ஜிஆர் என்னிடம் பாசம் காட்டியவர். **ஒரு நாள் சட்டமன்றத்தில் என்னை சந்தித்த எம்.ஜி.ஆர், என்னை அமைச்சர் பதவி தருகிறேன் என்று அழைத்தார். நான் திமுகவில் இருக்கிறேன்…திமுகவில் உங்களைச் சந்தித்தேன். என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக என்றேன். அப்ப நான் யார் என்றேன்… அவர் காலைத் தொட்டு வணங்கி நீங்கள் என் தெய்வம் என்று சொன்னேன்.** நான் எதற்கு சொல்கிறேன் என்று சொன்னால், திமுகவை நினைக்கும்போது இமயமே எனக்கு தூசாகத்தான் தெரியும்,. எனவே **நான் மட்டுமல்ல, என் மறைவுக்குப் பிறகும் என் குடும்பம் உங்களுக்கு தாசானுதாசராக இருக்கும், நன்றியுடன் இருப்போம் என்று சத்தியம் செய்து கூறுகிறேன்”** என்று குறிப்பிட்டார் துரைமுருகன்.

எதற்காக துரைமுருகன் இவ்வளவு இறங்கி வந்து பேசுகிறார்?

“திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் மார்ச் 29 ஆம் தேதியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகனுக்கு ஒரு ஷாக் கொடுத்தார். பொதுச் செயலாளர் தேர்தலுக்காக மனு செய்து, தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருந்த துரைமுருகன் பொருளாளராகவே தொடர்வார் என்று ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியிட்டார் ஸ்டாலின். இதைப் பார்த்து துரைமுருகன் வேதனையில் விம்மிவிட்டார்.

துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்குவது என்று மார்ச் மாதம் முடிவெடுத்த ஸ்டாலின், அதை ஜூன் மாதம் மாற்றிக்கொண்டது ஏன்? சட்டமன்ற வட்டாரங்களில் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல்தான் காரணம். ‘சட்டமன்றம் நடக்கும் நாட்களில் ஸ்டாலின் வரும் முன்பே துரைமுருகன் வந்துவிடுவார். ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் செல்வார். சீனியர் என்பதால் ஸ்டாலினும் இதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசுவதாக ஒரு தகவல் ஸ்டாலின் காதுகளுக்குச் சென்றது. **’கட்சியில முக்கியமானவரு சீனியரு. கலைஞருக்கு ரொம்ப வேண்டியவர். அவரே அடுத்து திமுக ஆட்சிக்கு வருமானு சந்தேகமா இருக்குனு என்கிட்ட வெளிப்படையா சொல்றாரு. மக்கள்கிட்ட நமக்கு நல்ல பேரு இருக்குனு சொல்றாரு’ என எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் துரைமுருகனைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதே ஸ்டாலினுக்குக் கிடைத்த தகவல்.**

மேலும், பொதுப்பணித் துறையின் நூற்றைம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள கான்ட்ராக்டுகள் துரைமுருகன் கேட்ட இடங்களில், அவர் கூறியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல். இதையடுத்துதான் துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்கும் முடிவில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாறிவிட்டார். அதுவும் கலைஞர் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டால்தான் துரைமுருகன் அதிகமாக வருத்தப்படுவார் என்பதற்காகவே அன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் தகவல்கள் துரைமுருகனுக்கு கிடைக்க அதன் பின் அவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தன்னிலை விளக்கம் கூறினார். இதன் பின்னரே… துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்க மீண்டும் முடிவெடுத்தார் ஸ்டாலின்.

இந்தப் பின்னணியில்தான் துரைமுருகன் பொதுக்குழுவில் அப்படிப் பேசியிருக்கிறார். 50 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் முக்கிய இடத்தில் இருக்கும் துரைமுருகன்.’நான் எம்ஜிஆர் கூப்பிட்டே போகவில்லை. வாழும் வரை திமுகவுக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்றெல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஸ்டாலினுக்கு தன் மீதுள்ள சந்தேகத்தை தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசித் தீர்த்துவிட்ட துரைமுருகன், பொதுக்குழு மேடையிலும் அதைப் போட்டுடைத்தார். அதாவது, **‘நான் எம்ஜிஆர் கூப்பிட்டே போகாதவன். எடப்பாடியை சந்திப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது?’என்பதுதான் துரைமுருகன் பேச்சின் சாராம்சம்.** துரைமுருகன் எப்போதுமே சென்டிமென்ட்டாக பேசுவார். ஆனால் பொதுக்குழுவில் முழுக்க முழுக்க உருக்கம் கொட்டிய பின்னணி இதுதான்” என்கிறார்கள் அறிவாலயத்தில்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *