மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

சிறப்புக் கட்டுரை: அரசியல் செய்வது தவறா?

சிறப்புக் கட்டுரை: அரசியல் செய்வது தவறா?

ராஜன் குறை

தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு ஒலிக்கிறது. எந்த ஒரு பிரச்சினையைக் குறித்து விவாதிக்கும்போதும் நீங்கள் இதை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மீது வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் சார்பாகப் பேசுபவர்களும்கூட பல நேரங்களில் நாங்கள் அரசியல் செய்யவில்லை, நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறோம் என்று கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் கூட ‘Politicising the issue’ என்று சொல்வார்கள். ஆனால், அது அரசியலுக்குத் தொடர்பில்லாத பிரச்சினைகளை, உதாரணமாக கலைஞர்களுக்கோ, விளையாட்டு வீரர்களுக்கோ விருதுகள் வழங்குவதை பிரச்சினை படுத்தினால், அதை அரசியல் ஆக்குகிறார்கள் என்பார்கள். அல்லது சமீபத்தில் சுஷாந்த் என்ற ஒரு நடிகர் தற்கொலை செய்துகொண்டதை பிகார் அரசு பிரச்சினைக்குள்ளாக்கியதை “நடிகரின் தற்கொலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்” என்று கூறலாம். ஆனால் எல்லா பிரச்சினைகள் குறித்தும் இதே குற்றச்சாட்டை சொல்வது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் அரசியல்தானே செய்ய வேண்டும்? பிறகு ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு ஆகிறது? சரி, அரசியல் செய்யலாம். ஆனால், விவாதிக்கப்படும் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்யக்கூடாது என்றால் எதை வைத்துக்கொண்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்கான வரையறை என்ன என்பது கேள்வியாகிறது.

உதாரணமாக, கொரோனா காலத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியபோது, பெருந்தொற்றை முன்வைத்து அரசியல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தால் கல்வியை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என்கிறார்கள். எல்லையில் சீனாவுடன் நடக்கும் பிரச்சினைகளைப் பேசினால், தேச பாதுகாப்பை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். இப்படியாக எதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்பது குழப்பமாகும்போது, அரசியல் செய்வதே தவறோ என்ற கேள்வியும் எழுகிறது. இதெற்கெல்லாம் உச்சகட்டமாக இந்தி தெரியாத தமிழர்கள் வட இந்திய ஊழியர்களால், அதிகாரிகளால் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அடுத்து “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் வைரல் ஆகியதை குறித்த விவாதத்தில், ஒரு நெறியாளர் தி.மு.க தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறதா என்று கேட்டபோது என் காதுகளையே நம்ப முடியவில்லை. திராவிட அரசியல் என்பதே இந்தி திணிப்பை எதிர்ப்பதும், தமிழ் மொழியை காப்பதுமாகத்தானே 1938ஆம் ஆண்டிலிருந்து உருக்கொண்டது? சிறையில் மாண்ட நடராஜன், தாளமுத்து துவங்கி தன்னை தீக்கிரையாக்கிக்கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, அரங்கநாதன் என மொழிப்போர் ஈகையிரின் தியாகமெல்லாம் தமிழிற்காகத்தானே? எதனால் திடீரென ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஏதோ புதிய கண்டுபிடிப்பை செய்வதுபோல தி.மு.க தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறதா என்று கேட்கிறார்? சற்றே பொறுமையாக இந்த பிரச்சினையைப் பரிசீலிப்போம்.

அரசியல் என்பதன் இரண்டு பரிமாணங்கள்

ஆங்கிலத்தில் அரசியல் என்பதை பொதுவாக பாலிடிக்ஸ் (Politics) என்கிறோம். இது ஒட்டு மொத்த சமூகம் ஒரு அரசை உருவாக்கி தன்னை நிர்வகித்துக்கொள்வதை குறிக்கும் சொல். சுதந்திரவாத அரசியலில் பொது நலன், பொது நோக்கு என்பது அரசு, சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் என அனைவரும் பகிர்ந்து கொள்வது. கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் பொது நன்மை என்பதையே அனைவரும் கருதிச் செயல்படுவார்கள் என்பதே நம்பிக்கை. எனவே கருத்து மாறுபாடுகளை விவாதிப்பதில் பற்றற்ற முறையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளைக் கடந்து பொதுநலன் கருதியே அனைவரும் பேசுவார்கள் என்பது இதன் லட்சிய நோக்கு.

அரசியல் என்பதற்கு இன்னொரு ஆங்கில சொல்லும் இருக்கிறது. அது பொலிடிகல் (Political) என்பது. கார்ல் ஷ்மிட் (1888-1985) என்ற ஜெர்மானிய சிந்தனையாளர் பொலிடிகல் என்ற சொல்லைப் பிரபலப்படுத்தினார். அதன் மூலம் அவர் குறிப்பிட்டது அரசியல் என்பது அதன் மூலாதார வடிவில் நண்பன் யார், எதிரி யார் என்பதை வரையறுப்பதுதான் என்ற கருத்தாகும். அதன்படி பார்த்தால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றினுள் பகைமை என்பதுதான் மையமானது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர பகைவனும் கிடையாது என்பார்கள்; ஒரு குறிப்பிட்ட நண்பனோ அல்லது பகைவனோ நிரந்தரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் பொருள் யாரோ ஒரு நண்பனும். யாரோ ஒரு பகைவனும் நிரந்தரமாக உண்டு என்பதுதானே? அதனால்தான் இந்த நண்பன்-பகைவன் வேறுபாடே அரசியலின் அடிப்படை என்கிறார் ஷ்மிட். இந்த கோணத்தில் எந்த ஒரு பிரச்சினையிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர் நிலைபாடுகள் எடுப்பதும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடுவதும் இயல்பானது.

பொதுவாக எதிர்க்கட்சி என்றால் எதற்கெடுத்தாலும் குறை கூறத்தான் செய்வார்கள் என்று ஆளும்கட்சி கூறுவது, எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல என்ற சிலர் விளக்கமளிப்பது, ஆக்கபூர்வமான விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எல்லாம் நாம் முதலில் சொன்ன சுதந்திரவாத நோக்கில் பொது நன்மை குறித்த உடன்பாட்டை எட்டுவதே அரசியல் என்ற நோக்கில் உருவாவதாகும். ஆனால் ஷிமிட் சொன்ன இரண்டாவது பொருளில் யோசித்தால் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து கடுமையாக முரண்பட்டு எதிர்த்து இயங்குவது என்பது இயல்பேயாகும்.

தொலைக்காட்சி விவாதங்கள் பொது நன்மை, பொது நோக்கு என்ற அடிப்படையில் பிரச்சினைகளை அணுக வேண்டும் என்று நினைப்பதால், அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக வேண்டுமென்றே பேசுகின்றனவா, அல்லது பொது நன்மை சார்ந்த பொது நோக்கை வந்தடைவதற்காக பேசுகின்றனவா என்ற கேள்வி எப்போதும் தோன்றுகிறது. இதைத்தான் “அரசியல் செய்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள். அதாவது பொது நன்மை. பொது நோக்கில் விவாதிக்காமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பேசுகிறீர்களா என்பதே இந்த கேள்வி. இதை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்வோம்.

நீட் தேர்வு தற்கொலைகள்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி அகில இந்திய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி அதன் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை நடைபெற வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றி செயல்படுத்தியது. உச்ச நீதிமன்றமும் அதற்கு உடன்பட்டது. இந்தச் சட்டத்திற்கும் நீட் தேர்விற்கும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சிகள் இது கல்வியில் மாநில உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்றார்கள். நீட் நுழைவுத் தேர்வுக்கென தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர வேண்டியுள்ளது. இதற்கான பொருளாதார வசதி இல்லாத ஏழை மாணவர்கள் மனம் துவண்டு போகிறார்கள். அதனால் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் நீட் தேர்வு தேவையில்லை என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைபவர்கள், அது தரும் மன அழுத்தத்தைத் தாங்க முடியாத மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடக்கிறது. அப்போது ஏற்கனவே இந்தத் தேர்வு தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சிகள் கடும் கோபம் கொள்கின்றன. இந்தத் தற்கொலைகளை முன்னிட்டு கடுமையாக எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்யும்போது மாணவர்களின் தற்கொலையை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஸ்ரீராம் சேஷாத்ரி என்ற விமர்சகர் இவர்கள் தற்கொலைகளை “வாங்கி” தங்கள் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்கிறார். பள்ளி மாணவர்கள் நீட் தவிர பல்வேறு காரணங்களுக்காகவும் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் அவற்றைக் குறித்து கவலைப்படவில்லை என்கிறார்.

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு அரசியல் முடிவும். அது நினைத்தால் தக்க சட்டம் இயற்றி தமிழகம் போன்ற அதில் பங்கேற்க விருப்பமில்லாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடியும். முழுக்க, முழுக்க அரசியல் நோக்கில்தான் அப்படி செயல்பட மத்திய அரசு மறுக்கிறது. அவ்வாறு இருக்கும்போது அந்தத் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பொங்கி எழத்தான் செய்வார்கள். இது கல்வி தொடர்பான பிரச்சினையில்லை. மாநில அதிகாரம் தொடர்பான அரசியல் பிரச்சினை.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டாலும் அது அரசியலே

எதிர்க்கட்சி ஆளும் கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது ஆட்சியின் குறைகளை அவர்கள் உரத்துப் பேசத்தான் செய்வார்கள். அதுவே அவர்கள் அரசியல் பணி. அரசின் எந்த நடவடிக்கையும், செயல்பாடும் இதற்கு விலக்கல்ல. எதிர்ப்பது என்பதே செயல்பாடு என்னும்போது பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, உடல்நலம் என எந்த பிரச்சினையிலும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும். பிரச்சாரம் செய்வதும் அவர்கள் உரிமை.

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே எதிர்க்கின்றனவா, தக்க காரணங்களுடன் எதிர்க்கின்றனவா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். எதிர்க்கட்சிகளின் பணி எல்லா விதமான அரசு முடிவுகளையும், செயல்பாடுகளையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான். இதைவைத்து அரசியல் செய்யாதே, அதை வைத்து அரசியல் செய்யாதே என்றெல்லாம் சொல்வது மக்களாட்சிக்கு ஆரோக்கியமானது அல்ல.

அரசியல் கட்சி எதை வைத்துக்கொண்டும் அரசியல் செய்யலாம். எதிர்ப்பது என்பதே அதன் பணி. தொடர்பல்லாத, தேவையில்லாத பிரச்சினைகளில் அரசியல் செய்தால் அதை மக்கள் கண்டிப்பார்கள். தேர்தலில் அதன் விளைவுகள் தெரியும். ஒரு நடிகர் தனிப்பட்ட பிரச்சினைகளால், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அந்த மாநில அரசுக்கு எதிராக மத்தியில் ஆளும் கட்சியோ, அதன் கூட்டணிக் கட்சிகளோ ஊடகங்கள் துணையுடன் “அரசியல் செய்தால்” மக்கள் அதைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். இது போன்ற பிரச்சினைகளை சுவாரஸ்யமாக பார்ப்பார்கள். வம்பு பேசுவார்கள். ஆனால் அதை அரசியல் பிரச்சினையாகக் கருதி ஓட்டளிக்க மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வு அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்வதையும் மத்திய அரசு தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காததையும் நிச்சயம் அரசியல் என்றே புரிந்துகொள்வார்கள்.

எந்த கட்சி தேவையான அரசியல் செய்கிறது, எது தேவையற்ற அரசியல் செய்கிறது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதையே குற்றமாக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் கட்சிகளும் அரசியல் செய்யவில்லை என்று மறுக்கவும் வேண்டியதில்லை. அவை எதைச்செய்தாலும், எதற்காக செய்தாலும் அது அரசியலே. ஆதலினால் அரசியல் செய்வோம்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020