மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

சட்டமன்றத்தில் என்ன செய்வது? முருகனுடன் கு.க. செல்வம் ஆலோசனை!

சட்டமன்றத்தில் என்ன செய்வது? முருகனுடன் கு.க. செல்வம் ஆலோசனை!

தமிழக சட்டமன்றம் இன்று (செப்டம்பர் 14) தொடங்க இருக்கும் நிலையில்... திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவருமான கு.க. செல்வம் இன்று தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்றத்தில் கு.க. செல்வத்தின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இருவரும் ஆலோசிக்கிறார்கள்.

கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த கு.க. செல்வம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, தான் பாஜகவில் இணையவில்லை என்றும் தனது தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு லிப்ட் கேட்பதற்காக டெல்லி வந்ததாகக் கூறி செய்தியாளர்களை திகைக்க வைத்தார். அத்தோடு நில்லாமல் மறுநாள் ஆகஸ்டு 5 ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்த கு.க.செல்வத்தை பாஜகவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். கமலாலயம் சென்ற கு.க. செல்வம், அங்கே அயோத்தி பூமி பூஜையை முன்னிட்டு நடந்த சிறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் திமுக தலைமை கு.க. செல்வம் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கியதோடு அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்து செல்வம் அனுப்பிய விளக்கத்தை ஏற்காமல் அவரை நிரந்தரமாக நீக்கம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதை எதிர்த்து கு.க. செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

இந்த அரசியல் சூழலில் இன்று சட்டமன்றம் கூடுவதால் திமுக அதிருப்தி மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் கு.க. செல்வம் பாஜகவின் குரலையே சட்டமன்றத்தில் எதிரொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை திமுக எம்.எல்.ஏ.க்களோடு அமர்ந்திருந்த கு.க.செல்வத்துக்கு இந்த சட்டமன்றத் தொடரில் மாற்று இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பேசியபோது, “கு.க. செல்வத்தை திமுக நிரந்தரமாக நீக்கிவிட்ட பின்னும் அவரது எம்.எல்.ஏ. பதவிக்கு பெரிய ஆபத்து இல்லை. வழக்கமாக கு.க.செல்வம் திமுக உறுப்பினர்கள் ஜெ. அன்பழகன், புரசை ரங்கநாதன் ஆகியோரோடு கடைசி வரிசையில் அமர்ந்திருப்பார். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் திமுகவைத் தாண்டிய ஓரத்திலோ, அல்லது அதிமுக உறுப்பினர்களின் பின் பக்கமோ உட்கார இடம் ஒதுக்கப்படலாம். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை தொகுதி வளர்ச்சி குறித்து சந்தித்து தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாகினர். அவர்கள் நேரடியாக ஆளுங்கட்சியை ஆதரித்ததால் அதிமுக உறுப்பினர்களுக்கு பின்னால் அமர வைக்கப்பட்டனர். இப்போது கு.க. செல்வத்தின் இடம் என்ன என்பது விவாதமாகியுள்ளது” என்கிறார்கள்.

சபாநாயகர் தனபால் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் கு.க. செல்வம் சட்டமன்றத்தில் பாஜகவின் குரலாக ஒலிப்பார் என்பதே இப்போதைய நிலவரம்.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020